Wednesday, July 16, 2014

பொறியியல் – கல்விக்கு அப்பால்

பொறியியல் – கல்விக்கு அப்பால்

           வருடாந்திர நிகழ்வாக, பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை/ தரம் குறித்துப் பொதுவெளியில் விவாதங்கள் நிகழ ஆரம்பித்து இருக்கின்றன. அது பெற்றோர், கல்வியாளர்கள், ஊடகவியலாளர்கள் மத்தியில் நிகழும் வழக்கமான நிகழ்வுதான். ஆனால் இந்த விவாதம் நிகழ வேண்டிய களம் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இடையே தான். அப்படி நீங்கள் எதையேனும் பார்த்திருந்தால் பெரும் அதிர்ஷ்டசாலிதான்.

தமிழ்நாட்டில் மொத்தம் 525 பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் ஒவ்வொரு வருடமும் பொறியியல் முடித்து வெளியேறுகின்றனர். இதில் கடந்த சில வருடங்களாக வேலைத்தகுதி (employable) கொண்ட மாணவர்களின் சதவிகிதம் குறித்த புலம்பல்கள் விவாதமாய் பெருமளவில் நிகழ்த்தப்பட்டு வர்வருகின்றன. உண்மையில் அந்த விவாதம் கல்லூரி முதலாளிகளால் செய்யப்படும் விலைச்செய்திகள்தான் (Paid news). அவற்றை முழுமையாய் ஆராய்ந்தால் அவர்கள் முடிவில் நல்ல கல்லூரியில் சேர்ந்தால் நல்ல மதிப்பெண் எடுத்து (நன்றாகக் கற்று அல்ல), வளாக வேலைத்தேர்வில் வெற்றி பெற்று வேலை (குறிப்பாக தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில்) வாங்கிவிடலாம் என்பதாய் இருக்கும். இது தவறு என்று பேசவோ, அதை மாற்றி மதிப்பெண்ணை விடக் கற்றுக்கொள்ளுதல் முக்கியம் என்றோ, பெரும்பான்மையைக் கல்வி கற்றலுக்குத் திருப்ப வேண்டும் என்றோ சொல்ல இந்தக் கட்டுரை எழுத நான் தயாரில்லை. இப்போதைய மத்திய தரச் சூழலில் அப்படிச் சொல்வது யாராலும் விரும்பக் கூடியதல்ல. ஆனால் கல்வியின் உச்சமான ஆராய்ச்சி வரை அப்படித்தான் செயல்படுவோம் என்பது ஏற்றுக்கொள்ளவே முடியாதது. அதைப்பற்றித்தான் இந்தக் கட்டுரை.
நாம் இங்கே பேசப்போவது பொறியியல் என்ற துறையின் மூலம் மானுட வளர்ச்சி என்பதைப் பற்றி மட்டுமே. சரி. மேலாண்மையில் பரேதோ கொள்கை (pareto principle – புழங்கு தமிழில் பாரெட்டோ/பரேட்டோ கொள்கை) என்று ஒன்று இருக்கிறது. அது இந்த உலகத்தில் இருக்கும் எல்லாவற்றையும் என்பதிற்கு இருபது (80:20) என்பதாகப் பிரித்துப் புரிந்து கொள்ளலாம் என்று சொல்கிறது. உதாரணமாக ஒவ்வொரு குடும்பத்திலும் வருமானத்தில் 80 சதவிகிதம் 20 சதவிகிதத் தேவைகளுக்குத் தான் செலவாகிறது. (தோராயமாக) இந்த விதியை உபயோக்கியாத ஆராய்ச்சிகள் வெகு சிலவே. உலகில் இருக்கும் ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புகளில் 80 சதவிகிதத்தை ஆராய்ச்சியாளர்களில் 20 சதவிகிதத்தினர்தான் கண்டுபிடிக்கின்றனர். இந்த 20 சத மாணவர்களை உருவாக்கத்தான் உலகம் முழுவதும் கல்வி அரசுகளால் வழங்கப்படுகிறது. அவர்கள்தான் மானுடத்தின் முன்னேற்றத்தை முன்னிழுத்துச் செல்பவர்கள். இந்த நோக்கத்தின் உபரிகளாகவே மற்ற மாணவர்களும் அவர்களின் உருவாக்கமும் நிகழ்கின்றன. பரேதோ விதியை நம்முடைய பொறியியற்கல்வியில் நடைமுறைப்படுத்தினால், ஒட்டு மொத்த இளநிலைப் பொறியியல் மாணவர்களில் 20 சதவிகித மாணவர்களாவது முதுநிலைப் பொறியியல் படிப்பிற்கும், அவர்களில் 20 சதவிகித மாணவர்களாவது ஆராய்ச்சிக்கும் (PhD), அவர்களில் 20 சதவிகிதத்தினராவது முதுநிலை ஆராய்ச்சிக்கும் (PDF) போக வேண்டும். அப்படி நடக்கிறதா? என்றால் இல்லை என்பதுதான் வருத்தம் தரக்கூடிய உண்மை.

உதாரணமாக நான் கல்லூரியில் படித்தபோது ஒரு வருட மாணவர்களின் எண்ணிக்கை 400 பேர். அவர்களில் 25 பேருக்கும் (~6%) குறைவாகவே முதுநிலைப் பொறியியல் படிக்கச் சென்றார்கள். அவர்களில் ஆராய்ச்சிப் படிப்பிற்குச் சென்றவர்கள் நான்கு பேர். இந்நிலையில் பொறியியல் ஆராய்ச்சிக் கல்வி (Engineering Research Education) குறித்த விவாதங்கள் தேவை. என்னளவில் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு என்பது ஒரு பிரச்சனை அல்ல. ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் தேவையான பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை இப்போதும் குறைவுதான். தங்கள் மாநிலங்களில் பொறியியல் கற்க வாய்ப்பில்லாத, இடம் கிடைக்காத வேற்று மாநில மாணவர்களை இங்கே ஈர்ப்பதன் மூலம், மாநில வருமானம் மற்றும் பணப் புழக்கத்தை இந்தக் கல்லூரிகள் கொஞ்சமேனும் அதிகரிக்கின்றன. அதில் மாணவர் நலன், கல்வித்தரம், கட்டுப்பாடு போன்றவை அரசின் கைகளில் இருந்தாலும் அவை முறையாகக் கண்காணிக்கப்படுவதில்லை. இது திருத்தி அமைக்கப்பட வேண்டிய ஒன்றுதான். மேலும் இவ்வெளிக்காரணங்கள் காலம் காலமாய் பேசப்பட்டு வரப்படுபவைதான். ஆனால் நாம் பேச வேண்டிய ஒரு உள்விவகாரம் ஒன்று இருக்கிறது – அது ஆராய்ச்சி அமைப்பு மற்றும் நடவடிக்கை குறித்து.

பொறியியல் கல்லூரிகளில் வேலை செய்யும் பெரும்பாலான ஆசிரியர்களுக்கு தங்கள் துறை சார்ந்த அறிவு மொத்தமாகவே இல்லை/ போதுமான அளவுக்கு இல்லை. இவர்கள்தான் தங்களிடம் பயிலும் மாணவர்களை முதுநிலை, ஆராய்ச்சிப் படிப்புகளுக்கு வழிகாட்டும் நிலையில் உள்ளவர்கள். தங்களுக்கே தெரியாத ஒன்றை எப்படி அவர்கள் மாணவனுக்குச் சொல்லித் தருவார்கள்? மேலும் பெற்றோர் தங்கள் பிள்ளைகள் நான்காம் வருடம் நடக்கும் வளாகத் தேர்வில் வெற்றிபெற்று வேலைக்குப் போய் வாழ்வில் நிலைபெற்றுவிட (settle) வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்கள். இவர்களில் படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற வேறுபாடெல்லாம் இல்லை. இந்த இரு போதாமைகளின் இடையே அரசு ஆராய்ச்சிப் படிப்புகள் குறித்து பெருமளவில் விழிப்புணர்வே ஏற்படுத்தவில்லை. இதில் அரசின் பங்களிப்பு குறித்து மேலும் புரிந்து கொள்ள, 1920-1980 வரையிலான ரஷ்யாவின் ஆராய்ச்சிகள், 1930-ல் இருந்தான அமெரிக்க ஆராய்ச்சிகள், 1980-களுக்கு பின்பான சீன ஆராய்ச்சிகளையும் அறிந்துகொள்ள வேண்டும். நாம் எவ்வளவு பின்தங்கி இருக்கிறோம் என்பதை எளிதில் இதன் மூலம் புரிந்து கொள்ளலாம்.

இந்நிலையில் கல்விச் சமநிலை என்பது நம் நாட்டில் எப்போதுமே சரியான நிலையில் இருந்ததில்லை. நான் மேலே கொடுத்திருக்கும் பரேதோ கொள்கை என்பது புரிதலுக்கான எடுத்துக்காட்டு மட்டுமே. உண்மையில் நாம் இந்தப் பரவலை சரியாக அளவிட என்றே நிறைய கல்வி சார்ந்த கருவிகள், கொள்கைகள் இருக்கின்றன. அதற்கு முன் மேலை நாடுகளில் –இப்போது சீனாவில்- ஆராய்ச்சித் துறைகள் எப்படி இயங்குகின்றன என்று முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு தேர்ந்த பேராசிரியரின் தலைமையில் ஒரு குறிப்பிட்ட துணைஉட்துறையில் மாணவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபடுவார்கள். அந்த ஆராய்ச்சி, அரசு அல்லது தனியார் நிறுவன நிதிப் பங்களிப்பில் இயங்கும். அப்பேராசிரியர் தன் துணைஉட்துறையில் பெரும் சாதனைகளை நிகழ்த்தி இருப்பார். மாணவர்கள் - ஒரு குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பைச் செய்த பின் அவர்களுடைய ஆராய்ச்சிப் படிப்பு நிறைவு பெறும், அதன் பின் சுயமாக தானே ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் தகுதியுடன் ஆராய்ச்சி நிருவனங்களில் சேர்ந்து தங்கள் துறைக்கான அறிவுப் பங்களிப்பை அளிக்க வேண்டும். சில ஆண்டுகள் கழித்து அவர்கள் விரும்பினால் கல்வித் துறைக்குத் திரும்பி அடுத்த தலைமுறை ஆராய்ச்சி மாணவர்களை வழி நடத்தலாம்.

ஆனால் இந்தியாவில் நடப்பது என்ன?
இதுவரை ஆயிரக்கணக்கான பொறியியல் ஆராய்ச்சி முனைவோர்கள் இந்தியாவில் உருவாகி இருக்கின்றனர். ஆனால் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புகள் ஏதேனும் நிகழ்ந்திருக்கிறதா? ஏனென்றால், இரண்டு/மூன்று தேர்ந்தெடுக்கப் பட்ட பாடங்களில் தெர்ச்சி பெற்று, ஏதேனும் ஒரு துறையில் மூன்று ஆராய்ச்சித்தாள்களைத் தயார் செய்து, அவற்றை பெயர் தெரியாத ஆய்வுப் பதிப்புகளில் வெளியிட்டுவிட்டாலே முனைவர் ஆகிவிட முடியும். இதன் மூலம் எத்தகைய ஆராய்ச்சி வகுப்புகளை நாம் நடத்தி வருகிறோம் என்று புரியும். இது போக இன்றுள்ள எந்த தொழில்நுட்ப, அறிவியல் அல்லது துறை சார்ந்த நிகழ்வுகள் குறித்து எதுவுமே தெரியாத பேராசிரியர்கள் – அவர்கள் பேராசிரியர்கள் என்பதற்காகவே ஆய்வு வழிகாட்டிகளாக இருக்கிறார்கள். இப்படியாக நம்முடைய ஆராய்ச்சித் துறைகளின் தரம் இருக்கிறது. மானுட வளர்ச்சியில் நாம் பங்குபெருகிறோம் என்று இந்த மாணவர்களுக்கும் தெரியாது. ஆராய்ச்சிப் படிப்பை மற்றெல்லா படிப்புகளைப் போல “படித்து முடித்து” விட்டுக் கல்லூரியில் ஆசிரியராகச் செர்ந்துவிட்டால் வாழ்வில் நிலை பெற்றுவிடலாம், என்று சொல்லும் பல சகமாணவர்களை சந்திக்கிறேன். இதுவரை நான் ஆராய்ச்சியில் சாதிக்க வேண்டும் மானுடத்திற்கான என் பங்களிப்பை என்னுடைய கல்வி – ஆராய்ச்சித்தேடலின் மூலம் தர வேண்டும் என்று நினைக்கும் சில மாணவர்களைக் கூட சந்தித்ததில்லை.

வெளிநாட்டுக் கல்வியும் நமது மாணவர்களும்
பொறியியல் மாணவர்களில் ஒரு சாரார், வெளிநாட்டுகளுக்கு தங்களுடைய முதுநிலைக் கல்வி பயிலச் செல்கின்றனர். இவர்களில் 99% பேர் அந்த அந்த நாடுகளில் வேலை வாய்ப்பைப் பெற ஒரு பின் வழியாக இதை உபயோகப்படுத்துகின்றனரே தவிர, கற்றல் அல்லது ஆராய்ச்சி வாய்ப்புகளைப் பயன்படுத்துவதே இல்லை. ஆராய்ச்சி வாய்ப்புகள் ஒப்பீட்டளவில் அங்கே மிகச் சிறப்பானவை. இருந்தும் சில அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் project செய்யாமல் ஒன்றரை வருடங்களில் முதுநிலைப் பொறியியல் முடிக்க முடியும் என்றால், அதில் அதிகமாக இந்தியர்கள் இருக்கின்றனர். சீக்கிரம் படித்து முடி, வேலை வாங்கு இதுதான் இவர்களின்  தாரக மந்திரம். இவர்களால் தேர்ந்தெடுத்த துறைகளில் எந்த முன்னேற்றமும் இருக்காது. அதே நேரம் பங்களிப்பைத் தர விரும்பும் மாணவனுக்கு வழிமுறைகள் தெரியாததால், வசதிகள் இல்லாததால் வெளிநாட்டுக் கல்விக்கான வாய்ப்பே கிடைப்பதில்லை என்ற நிலையில், கிடைக்கும் சிலரும் தங்கள் பங்களிப்பைத் தருவதில்லை என்பது ஒட்டுமொத்தத் துறைக்குச் செய்யும் துரோகம்.

என்ன செய்யலாம்?
முதலில் நமக்கும், நமது கல்வித்திட்ட அமைப்பாளர்களுக்கும் செயல்முறைப் பொறியியல்(applied Engineering) மற்றும் ஆராய்ச்சிப் பொறியியல் (Research based Engineering) பற்றிய புரிதலே கிடையாது. செயல்முறைப் பொறியியல் என்பது ஏற்கனவே இருக்கும் ஒரு கண்டுபிடிப்பை கற்று உணர்ந்து கொண்டு அதைத் தேவைக்கு ஏற்ப மாற்றி மக்களுக்கு வழங்குபவர்கள். இவர்களின் வேலை, செய்ததைச் சிறுசிறு திருத்தங்களுடன் திரும்பத் திரும்பச் செய்வதாக இருக்கும். பெரும்பாலும் நிலை பெற்ற மூலமுன்மாதிரியின் (patterned prototype) அடிப்படையில் செயல்படும் வேலைகளைச் செய்யும் இவர்கள் செயல்முறைப் பொறியியலாளர்கள். அவ்வப்போது இவற்றில் இருந்தும் புது கருதுகோள்கள் உருவாகி வரும். அவற்றில் வெகு சிலவே பெரும் மாற்றங்களை நிகழ்த்தும். நமது நாடு முழுக்க நிரம்பி இருக்கும் தொழில் நுட்ப நிறுவனங்கள் இப்படி இயங்குபவையே, இவற்றிற்குப் பொறியியல் பட்டதாரிகளே தேவை இல்லை. அப்படியே தேவை என்றாலும் செயல்முறைப் பொறியியல் பட்டதாரிகளே அதற்குப் போதுமானவர்கள். இவர்களை உருவாக்க இப்படிப்பட்ட நிறுவனங்களில் வேலை செய்து அனுபவம் கொண்ட ஆசிரியர்கள் போதும்.

இரண்டாவது ஆராய்ச்சிப் பொறியியல் என்பது இதில் இருந்து முற்றிலும் வேறானது, அவர்கள் புது மூலமுன்மாதிரிகளைக் கண்டுபிடிப்பவர்கள். அவர்களின் துறைக்கு ஏற்றது போல வேறு வேறு முன்மாதிரிகளை ஒன்றிணைத்து புதிதாக ஒன்றை உருவாக்குபவர்கள். இவர்களை உருவாக்க இவர்களைவிடத் தொழில்நுட்ப அறிவில் சிறந்த, ஆராய்ச்சிகளில் பங்குபெற்ற ஆசிரியர்களை உருவாக்கி நியமிக்க வேண்டும்.

நம்முடைய பொறியியல் கல்வி இந்த இருவகையினருக்குமே பொதுவான கல்வி முறையை வைத்து இருக்கிறது. அது சரியல்ல. ஒரு செயல்முறைப் பொறியாளருக்கு இத்தனை கடுமையான பாடத்திட்டமே தேவை இல்லை. தன் வேலையில் ஒருமுறைகூட வகை, தொகை நுண் கணிதத்தைப் பயன்படுத்தாத லட்சக்கணக்கான பொறியாளர்கள் இங்கே உண்டு. அதே நேரம் இந்த ஒரு பாடத்தாலேயே பொறியியல் முடிக்காமல் போன மாணவர்களும் உண்டு. இப்படியான மாணவர்கள், அவர்களால் முடிந்த செயல்முறைப் பங்களிப்பைக் கூட அளிக்க முடியாமல், வேறு வேறு வேலைகளைச் செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகின்றனர். இது ஒரு உழைப்பு வீணடிப்புதான் (Effort Loss). அவர்களால் முடிந்த பங்களிப்பை அளிக்க நாம் அனுமதிக்க வேண்டும். அதே சமயம், ஒரு ஆராய்ச்சிப் பொறியாளருக்கு இவ்வளவு காலாவதியான பாடத்திட்டம் தேவை இல்லை. நாம் உருவாக்குவது இரண்டுக்குமே தேவைப்படாத மாணவர்களை என்பது புரிகிறதா?
இளநிலைப் பொறியியல் கல்வியில் மாணவர்களின் விருப்பம் சார்ந்து அவர்களைப் பிரித்து விடவேண்டும். ஆராய்ச்சிக்குத் தேவையான கல்வித்திட்டம் என்ற ஒன்று அமைக்கப்பட்டு அதில் குறைந்த பட்சமாக 30 சதவிகித மாணவர்கள் அனுமதிக்கப் பட வேண்டும். அவர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் ஒருங்கிணைந்த முதுநிலை+ஆராய்ச்சிக்கல்வி (integrated PhD) சார்ந்த படிப்பில் அனுமதிக்கப்பட வேண்டும்.

செயல்முறைப் பொறியியல் படித்தவர்கள் ஆராய்ச்சிப் படிப்புகளுக்கு எப்படித் திரும்புவது என்ற கேள்வி எழும், அவர்களும் ஆராய்ச்சி சார்ந்த முதுநிலை பொறியியல் படிப்பைப் படிக்கலாம். ஆனால் அந்த ஆராய்ச்சிக்குத் தேவையான, ஆனால் இளநிலைக் கல்வியில் பயிலாத படங்களை எல்லாம் முதுநிலைக் கல்வியில் முடித்துவிட்டு ஆராய்ச்சிப் படிப்புகளுக்குத் திரும்பலாம். இப்படி எல்லாம் நம்முடைய பாடத்திட்டங்களை, கல்விமுறைகளை மாற்றாதது வரை, தொழில் நுட்பம் சார்ந்து நாம் தன்னிறைவு அடையப்போவதே இல்லை. அதுவரை நாம் ஊடகங்களில் போலியான விவாதங்களை நிகழ்த்தி விட்டு நடைமுறையில் அறிவுக்கூலிகளை உருவாக்கும் நாடுகளில் ஒன்றாக இருக்க வேண்டியதுதான்.


குறிப்பு: இதில் குறிப்பிடப் பட்டுள்ள பல முன்னேற்றச் செயல்பாடுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இந்தியாவில் நடந்து வருகின்றன. அவை பரவலாக்கப்பட்டு ஒருங்கிணைந்த முனைப்பு ஏற்பட வேண்டும் என்பதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கம் – குறைகளை மட்டுமே சொல்வதல்ல.

நன்றி : http://solvanam.com/?p=34673 

Thursday, July 3, 2014

மீன்கள் வாழும் படகறை

மீன்கள் வாழும் படகறை 
கொஞ்சமும் மிச்சமற்ற 
வாழ்வொன்றை வாழ்வது 
பற்றிப் பேசியபடியே 
வாழ்ந்து 
வாழ்ந்தபடியே பேசி 

இரவொன்றின் தனிமையில் 
ஏதொன்றும் அற்ற 
கணத்தில் 
காமமே வாழ்வென்றும் 
இடை நீளும் வாளும் 
அது பொருதும் 
நிகழ்வோன்றே 
வாழ்வும் ஆன
பொழுதொன்றில் 
வாழ்வென்பது -

மீன்கள் உறங்கும், 
எரிந்தும், மூழ்கியும்,
பாசமேறியும்   இற்ற  
ஒற்றைப்  படகு.

குதிரைக் கறியும் மற்றதும் - கவிதை

குதிரைக் கறியும் மற்றதும்

இருவேறு கறியில் செய்த 
உணவொன்றைத் 
தேடினேன்.

தேவை
நீண்ட குழல்க் கறி - குதிரையின் உடல்.
மற்றது - அதுவல்ல.

தீராஉரையாடலின் முடிவில்
நாட்பட்ட முட்டை வாசத்துடன் 
எதுவோ 
பரிமாறப்பட்டது.
ஆனால்,
அது 
கெட்டுப் போனதல்ல.

உண்ணும் போது
குறிப்பொன்று அதன் எலும்பில்
நிரடியது,

குறிப்பு-
வேறெவருக்கும், 
அதைத்
தரமுடியாதென்றும், 
உண்ட பின் 
எஞ்சும் அது 
பின் 
யாராலும் உண்ணப்படும்,
அவ்வாறே அது 
இப்போது
என்னிடமும் என்றும்.

நான் குறிப்புகளை 
ரசிப்பவன் அல்ல.

குதிரையின் வாசத்துடன் 
குழல்க்கறி வேண்டும் என்றேன்,
அதன் ருசி, பெயர்தான் அன்றி 
வாசம் அல்ல
என்பதாய்ச் சொல்லப்பட்டது.

கலக்கப்பட்ட மற்றொரு கறி
வாசமும், ருசியும் அற்ற
கிழட்டுக் கழுதையின் 
முன்பக்கக் கறியல்லாது 
வேறென்ன?

சந்தி வேளையில் 
கிழவிலங்கின் நிணம் வழிய 
ஒரு பகுதி 
குதிரையாய் மாறிய
என்னை 
உண்ணும் 
உன்னைக் காண்பேன்.

பின்
உன்னை 
நான் 
உண்பேன்.

Tuesday, June 24, 2014

எப்போதும் போல் - கவிதை - சொல்வனம்

நாளை நான்
இன்னொருவனின் கல்லறையில்
ஒளிந்திருக்கலாம்.
ஒரு குழந்தையின் கைப்பிடி மண்,
யாரோ ஒருவரின் கண்ணீர்,
அல்லது
காறித்துப்பும் எச்சில்
என் மேல் விழலாம்.
யாவையும் அல்லாது
யாருடைய கல்லறையில்
ஒளிந்திருக்கிறேன்
என்பதைத்
தோண்டி அறியும் நாயாக
நானே இருக்கலாம்.
இருந்தும்,
இறுதியாய்க் கல்லெறிவது
எனக்கு
எப்போதும் போல்
சுலபமாய் இருக்கிறது. 

நன்றி சொல்வனம்
http://solvanam.com/?p=23939

ஓநாய் குலச்சின்னம்– அனுபவமும் வாசிப்பும்- சொல்வனம்

நம்மில் எத்தனை பேருக்கு விவசாயத்தின் பரிணாமம் தெரியும்? உண்மையில் விவசாயம் என்பதுதான் மனிதன் இயற்கைக்கு எதிராகச் செய்ய ஆரம்பித்த முதல் விஷயம். காட்டில் கிடைக்கும் பொருட்களை மட்டும் சாப்பிட்டு, கிடைக்காவிட்டால் பட்டினி கிடந்து, உணவை மற்ற உயிரினங்களுடன் பங்கிட்டு வாழ்ந்த ஆதிமனிதனுக்கு இயற்கை வெறும் நண்பன் மட்டுமே. அதே மனிதன் என்று ஓரிடத்தில் தங்கிப் பயிரிட ஆரம்பித்தானோ அன்று முதல் தன்னை முன்னிறுத்தி, இயற்கையைத் தன் “எதிரியாகவும்” பார்க்க ஆரம்பித்தான். இயற்கையுடன் இயைந்த வளர்ச்சி மட்டுமே சரியானது. எல்லா உயிர்களையுமே ஓர் அளவுடன் தன்னை மீற, இயற்கை அனுமதித்தே வருகிறது. ஆனால், திரும்பச் சரி செய்ய முடியாத அளவிற்கு, நாம் செய்யும் எந்த விசயமும் மோசமானதே.
இன்று நாம் வாழ்வை உரங்கள், பூச்சிக்கொல்லிகள், மரபணு மாற்றப்பயிர்கள், அணு உலைகள், நீராதாரங்கள் அழிப்பு என்று இயற்கைக்கு எதிரான பெரும் போராக மாற்றி இருக்கிறோம். அதனால் உயிரினச் சமநிலை, முன் எப்போதையும் விடப் பெரும் சமநிலைக் குறைவை அடைந்து வருகிறது. கண்முன் மறையும் ஒவ்வொரு விசயம் மூலமும் நம்மை விழிக்கச்செய்ய இயற்கை முயல்கிறது, ஆனால் எதையுமே புரிந்து கொள்ளத் தயாரில்லாத, விரும்பாத உயிரினமாக நாம் வாழ்கிறோம்.
நாவலைப் பற்றிப் பார்ப்பதற்கு முன்பு, என் முன் நிகழ்ந்த நிகழ்வொன்றைச் சொல்லிவிடுகிறேன். நான் தமிழகத்தின் அரைப்பாலை நிலமான சிவகங்கையைச் சேர்ந்தவன். எங்களுக்கு என்று தனித்த விவசாயக் கலாச்சாரம் உண்டு. நாங்கள் தஞ்சையை, மதுரையைப் போல ஆற்றையோ, வடதமிழகத்தைப் போல ஏரிகளையோ நம்பி விவசாயம் செய்பவர்கள் அல்ல.வானம் பார்த்த பூமியில், முற்றிலும் மழையை நம்பி விவசாயம் செய்பவர்கள். பெரும்பாலும் மழை பொய்க்கும். ஆனாலும் எங்கள் நிலத்தில் இன்றுவரை விவசாயம் இருக்கிறது, அவற்றில் மழையை நம்பி வருடத்தில் ஒரு முறையேனும் உழப்படும் நிலங்கள் நஞ்சை என்றும், மழையே பெய்தாலும் நீர் நிற்காத வரல் நிலம் புஞ்சை என்றும் அழைக்கப்படுகிறது. நஞ்சை விவசாயம் என்றுமே எங்கள் மக்களின் உணவுத்தேவைக்காக மட்டுமே செய்யப்பட்டு வருகிறது. கிணறுகள் வெகு அபூர்வம். நிலத்தடிநீரை உபயோகப்படுத்தி விவசாயம், உற்பத்திப் பெருக்கம், தொழில்முறை விவசாயம் என்பதெல்லாம் சாத்தியமே இல்லை. சில பதிற்றாண்டுகளுக்கு ஒருமுறை மிதமிஞ்சிப் பெய்யும் மழையின் போது மட்டும் புஞ்சையில் ஒருமுறை உழுது, நீர்த்தேவை குறைந்த பயறுகளை விதைப்பார்கள். மற்ற நேரங்களில் ஆடு மாடுகளின் மேய்ச்சல் நிலமாக புஞ்சை இருக்கும். புஞ்சையில் விவசாயம் செய்வதை யாரும் வரவேற்கமாட்டார்கள். ஒருமுறை கூட உழப்படாத புஞ்சை நிலங்கள் கூட உண்டு. அவை வெறும் சொத்துக்கணக்குகளில் மட்டுமே இருக்கும். இது எங்கள் பகுதியின் விவசாயமுறை.
வானம்_பார்த்த_பூமி
1990களில் எங்கள் பகுதிக்கு, தருமபுரி மற்றும் சேலத்தில் இருந்து மக்கள்குடும்பம், குடும்பமாக வரத் தொடங்கினர். அவர்கள் பகுதியில் 1000 அடிக்கும் மேல் ஆழ்துளைக்கிணறுகள் அமைத்தும் தண்ணீர் இல்லாததால் சொத்துக்களையெல்லாம் விற்றுவிட்டு எங்கள் பகுதிக்குக் குடி பெயர்ந்தனர். வந்த உடன் அவர்கள் செய்தது, அதுவரை கைபடாமல் இருந்த புஞ்சைகளை எல்லாம் மொத்தமாக வாங்கியதுதான். ஒரு ஏக்கர் புஞ்சை நிலம் 2000 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை (ஆம் வெறும் சல்லிசான விலையில்) தந்து அவர்களால் வாங்கப்பட்டது. எதற்கும் பயனில்லாத, யாரும் வாங்க விரும்பாத கள்ளிகள் வளர்ந்த, சரலைகள், அரளைக் கற்கள் நிறைந்த நிலத்தை அவர்கள் விலை கொடுத்து வாங்க வாங்க எங்கள் மக்கள் விற்றுத் தள்ளினார்கள்.
கடும் உழைப்பாளிகளான அம்மக்கள் பெரும் எந்திரங்களால் நிலங்களை ஒழுங்குபடுத்தி 120 அடிவரை கிணறுகளைத் தோண்டி, அதனுள் 400 அடிவரை ஆழ்துளைக்கிணறுகளை அமைத்து விவசாயம் செய்ய ஆரம்பித்தார்கள். பொட்டல் காட்டில் சிறுது சிறிதாக பசுமையான நிலம் உருவாகத் தொடங்கியது. சரளையில் கரும்பு, காய்கறி ஏன் பழமரங்களையும் கூட வளரச்செய்தார்கள். அவர்களின் விவசாய முறைகள் எங்களுடைதைப் போல சமநிலை கொண்டதல்ல. ரசாயன உரங்களை, தடை செய்யப்பட்ட பூச்சிமருந்துக்களைப் பயன்படுத்தி லாபத்தை மட்டும் நோக்கமாகக் கொண்டு செயல்படும் தொழிலாக அதை அவர்கள் செய்தார்கள்.
கடந்த இருபது ஆண்டுகளில் 50 முதல் 150 ஏக்கர் கொண்ட பெரும் தோட்டங்களை உருவாக்கி அதன் மூலம் பணம் சம்பாதித்தனர். விளைவு – இப்போது நிலத்தடிநீர்மட்டம் பாதாளத்தில் இருக்கிறது. இப்போது எஞ்சி இருப்பது நீரற்ற, மலட்டு மண் கொண்ட, நரிகள், கீரிகள், மான்கள் முற்றிலும் அழிக்கப்பட்ட நிலப்பகுதி. அதன் தொடர் விளைவாக, தங்கள் தோட்டங்களை சில கோடிகளுக்கு விற்றுவிட்டு, இதே போல குறைவான பணத்திற்கு நிலம் கிடைக்கும் தமிழகத்தின் வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்கின்றனர். இப்போதுதான் ஏன் புஞ்சைக் காடுகளை எங்கள் முப்பாட்டன்கள் விவசாயம் செய்யாமல் வைத்திருந்தார்கள் என்று எங்களுக்குப் புரிகிறது. அவை சில ஆயிரம் ஆண்டுகளாக, நீர்ப்பிடிப்புப் பகுதியாக, மெய்ச்சல் நிலமாக, எரிபொருள் உற்பத்திப் பகுதியாக, சிற்றுயிர் வாழிடமாக இருந்துள்ளன. இது புரியாத எங்களுக்கு இன்று எஞ்சி நிற்பது மீட்டுருவாக்கவே முடியாத, முழுப்பாலை. இவ்வளவும் வெறும் இருபத்தைந்தே வருடத்தில் நடந்துவிட்டது.
முக்கியமாக இங்கே புரிந்து கொள்ள வேண்டியது, நிலம், விவசாயம், அதன் முறைகள், விளை பொருட்கள் குறித்து ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு அறிவியல் சார்ந்த பாரம்பரியம் இருக்கிறது. அது திடீரென ஒரே நாளில் உருவானதல்ல. பல்லாயிரம் ஆண்டுகளாக, பல்லாயிரம் மனிதர்களின் ஒட்டுமொத்த சிந்தனையில், உழைப்பில் உருவாகி வந்தது. அதை அறியாத வேறு பகுதி மனிதர்களோ, அவர்களின் சிந்தனைகளோ, ஏன் மற்றொரு விவசாயியோ கூட அந்தக் கருத்தாக்கத்தை குறுகிய காலத்தில் (குறுகிய என்பது சில தலைமுறைகளாகக் கூட இருக்கலாம்) புரிந்து கொள்ள முடியாது. எந்த மனிதனும் தன்னால் புரிந்து கொள்ள முடியாத உண்மைகளைக் காலாவதி ஆனது என்று சொல்லி அழித்தொழிப்பான். அதுவே எங்கள் நிலத்திலும் நடந்தது, இதன் பின்னணியில்தான் இந்த நாவலை வாசிக்க ஆரம்பித்தேன்.
Wolf
நாடோடிகளுக்கும், விவசாயிகளுக்கும் இடையிலான சிந்தனை முரண்கள் எப்படி இயற்கை மேல் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதை இந்நாவல் ஒவ்வொரு நிகழ்வாக விவரிக்கிறது. மாபெரும் மங்கோலியப் புல்வெளியைத் தலைமுறை தலைமுறையாக நாடோடிகள், ஓநாய்களுடன் பங்கிட்டு வாழ்கின்றனர். ஓநாய்கள் புல்வெளி உயிரினங்களான மான்களை, மர்மோட்களை, எலிகளை வேட்டையாடி உண்கின்றன. அவை வேட்டையாடிக் கொன்ற உயிரினங்கள் “சிலவற்றை”” நாடோடிகள் எடுத்துக் கொள்கின்றனர். அதே போல எப்போதாவது நாடோடிகளின் ஆடுகளை, குதிரைகளை ஓநாய்கள் கொன்று திண்றுவிடுகின்றன. எப்போதாவது மனிதர்கள் சிலரை ஓநாய்களும், அவ்வப்போது ஓநாய்கள் சிலவற்றை மனிதர்களும் கொன்றுவிடுகின்றனர். ஓநாய்களின் தோல் மனிதருக்கும், மனிதர்கள் இறந்துவிட்டால், அவர்களின் உடல் ஓநாய்க்கும் வழங்கப்படுகிறது. இவை எல்லாவற்றையும் விட, மேய்ச்சல் நிலத்தின் பேருயிர் புல் என்றே நாடோடிகள் நினைக்கின்றனர். அதனால் எதுவும் மிதமிஞ்சி நடப்பதில்லை. இவற்றையெல்லாம் மேய்ச்சல் நிலத்தின் கடவுளான டெஞ்ஞர்(இயற்கை) சரியான கணக்குடன் செய்து வருகிறது. இதன் மூலம் உயிர்ச்சமநிலை மேய்ச்சல் நிலத்தில் தொடந்து பேணப்படுகிறது.
அந்த விரிந்த நிலத்தின் உயிர்ப்பை உணர்ந்தபடி வாழும் மங்கோலிய நாடோடிக் குறுங்குழு ஒன்றின் தலைவர் பில்ஜியும்- அவரது குழுவும், கலாச்சாரப் புரட்சியின் ஒரு பகுதியாக அங்கே வந்திருக்கும், ஆனால் இந்த நிலம் பற்றி எதுவுமே அறியாத சீன மாணவர்களும் தங்கள் வாழ்வைப் பகிர்ந்து கொள்ளவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். அவர்களில் ஜென்சென், பெரியவர் பில்ஜியுடன் தன் கேள்விகள் மூலம் நெருக்கமாகிறான். மங்கோலியனாக எப்படி இருப்பது? என்று அவனுக்குள் ஒரு கேள்வி இருக்கிறது. ஒரு மங்கோலியனாய் இருக்க ஒருவன் ஓநாயாய் இருக்க வேண்டும் என்பதை பில்ஜியிடமிருந்து அவன் கொஞ்சம் கொஞ்சமாகக் கற்றுக்கொள்கிறான். பில்ஜி ஒரு ஓநாய்தான். ஆண்டாண்டு காலமாக ஒநாய்களிடம் இருந்து அவர் மூதாதேயர்களும், அவரும் பெற்ற அறிவு, அவரை ஒரு ஓநாயாகவே மாற்றியுள்ளது. ஒரு தலைமை ஓநாய் எப்படித் தன் குழுவைக் கட்டியமைக்குமோ, உணவைப் பங்கிட்டுக் கொள்ளுமோ, ஒரு தாக்குதலைத் திட்டமிடுமோ, ஒரு தாக்குதலில் இருந்து தன் குழுவைக் காப்பற்றுமோ, தியாகம் செய்யுமோ அப்படியே பில்ஜியும் செய்கிறார். எப்படிச் செங்கிஸ்கானை இந்த ஓநாய்களும் புல்வெளியும் ஒரு பேரரசனாக உருவாக்கியதோ அதைப் போல. ஜென் சென் அவரிடமிருந்து ஓநாய்க் குணங்களைக் கற்றுக் கொள்ளாமல், ஓநாய் குறித்த சாகசங்களை மட்டும் பெற்றுக் கொள்ள நினைக்கிறான். ஓநாய் ஒன்றை வளர்ப்பது மட்டுமே அவன் குறிக்கோள். ஆனால் ஒரு ஓநாய்த் தாக்குதலில் இருந்து மீளும் அவன் உண்மையிலேயே ஓநாய்களைப் புரிந்து கொள்ள முயல்கிறான்.
இந்நிலையில் புரட்சியின் ஒரு பகுதியாக, கட்டாயமாகப் பணியமர்த்தப்படும், விவசாயச் சீனர்களால் இந்தச் சமநிலையைப் புரிந்துகொள்ளவே முடிவதில்லை. அவர்கள் ஓநாய்களை எதிரிகளாகப் பார்க்கின்றனர். ஓநாய்களை ஒழித்துக் கட்டிவிட்டால், இந்த புல்வெளி முழுவதும் விவசாயமும், கால்நடை வளர்ப்பும் செய்யலாம் என்று முடிவு செய்கின்றனர். திட்டத்தின் ஒரு பகுதியாக அவற்றின் எஞ்சிய உணவைத் திருடுவதில் சற்றும் மனசாட்சி இன்றி வழித்துத் துடைப்பதுடன், அவற்றின் குட்டிகளைத் திருடுவது, தோலுக்காக ஓநாய்களை வேட்டையாடுவது, விஷம் வைப்பது என்று சமநிலையைக் குலைக்கின்றனர்.அச்செயல்களுக்குப் பதிலடியாக ஓநாய்கள் மனிதரை மிஞ்சிய அறிவு ஒருங்கமைவுடன் பதிலடி தருகின்றன. அவர்களின் குதிரை மந்தைகள் நிர்மூலமாக்கப்படுகின்றன. அது ஒரு எதிர்வினை என்பதைப் புரிந்து கொள்ள மறுக்கும் சீனர்கள், அழித்தொழிப்பில் ஈடுபடுகின்றனர். சமநிலையின் ஒரு பகுதியாக ஓநாய் வேட்டையை ஆதரிக்கும் பில்ஜி, ஒரு ஓநாய் வேட்டையை நடத்துகிறார். அதன் பின், அவர் ஓநாய்களை மேலும் மேலும் வேட்டையாட உதவுமாறு கட்டாயப்படுத்தப்படுகிறார். அதன் பின் எவ்விதக் காரணமும், கணக்கும் அற்று ஒட்டு மொத்த ஓநாய்களும் அழித்தொழிக்கப்படுவதை வேதனையுடன் பார்க்கிறார். இவற்றைப் பில்ஜி என்ற அந்த நாடோடிக் கிழவனால் தடுக்க முடியாமல் போக, இறுதிவரை சீனர்களால் இந்தப் புல்வெளியைப் புரிந்து கொள்ளவே முடியாது என்று ஜென் சென்னிடம் சொல்கிறார்.
நாய்களையும், ஓநாய்களையும் சமமாகக் கருதும் ஜென்சென், அந்த அறியாமையில் ஒரு ஓநாய் குட்டியைத் திருடி அதை நாயைப் போல வளர்க்கிறான். ஆனால் அதை வீட்டு விலங்காக்கும் அவன் ஒவ்வொரு முயற்சியும் தோல்வியில் முடிகிறது. இறுதியில் அவன் அதைத் தன்னிடமும் வைத்துக் கொள்ள முடியாமல், ஓநாய்க் கூட்டத்திடமும் சேர்க்க முடியாமல் போக, குற்ற உணர்ச்சி மேலிட அதைக் கொலை செய்கிறான். இதன் மூலம் இயற்கைக்கு எதிராக ஒரு துரும்பளவு மாற்றம் கூட சாத்தியம் இல்லை என்பதை உணர்கிறான். சீனர்களோ, பெரும் ஆயுதங்களைப் பயன்படுத்தி, ஓநாய்களை மட்டுமல்லாது, மான்கள், மர்மோட்டுகள், அன்னங்கள், வாத்துகள் என அனைத்தையும் அற்றுப் போகச்செய்கின்றனர். மனிதர்கள் உயிர்களை அழிப்பது எந்த ஒரு காரணத்திற்காகவும் அல்ல, தங்களின் பேராசைக்காக மட்டுமே என்பதை ஜென் சென் உணரத் தொடங்குகிறான்.
wolf totem
ஜென்சென் என்னும் அந்தச் சீன மாணவனும், ராணுவத்தலைமையும், சீன விவசாயிகளும் அவரவர் பார்வையில் பார்க்கின்றனர். பில்ஜி மட்டுமே ஓநாய்களை இயற்கையின் ஒரு பகுதியாகப் பார்க்கிறார். தன் படைப்பின் ஒரு கண்ணியை அறுத்த மனிதர்களுக்கு, டெஞ்ஞர் அதன் வழியில் மேய்ச்சல் நிலத்தின் மாபெரும் உயிரான புல்லின் வழியே பதில் சொல்கிறது. அந்தப் பதில், இயற்கையைச் சுரண்டும் நாம் எல்லோருக்குமான பாடம்.
இயற்கையை ஒருபோதும் நாம் முற்றிலும் புரிந்து கொள்ள முடியாது. நாவலில், ஓநாய்களின் தாய்ப்பாசம் குறித்து வருவது, ஒவ்வொரு உயிரும் தன் சந்ததிகளின் மூலம் தங்கள் இன நீட்டிப்பை உறுதி செய்ய முயல்வதைத்தான் காட்டுகிறது. ஆனால் நாம் நம் சந்ததிகளுக்கு என்ன மாதிரியான சூழலை வழங்கப் போகிறோம்? இன்று நான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்ற குறுகிய கருத்தாக்கத்தினால் முடிந்த அளவு, இந்த உலகத்தைச் சுரண்டி வாழ்கிறோம். இயற்கையை வெல்ல முடியாது என்று புரிந்து கொள்ள ஜென் சென்னிற்கு ஒரு ஓநாய் வளர்ப்பு போதுமானதாய் இருக்கிறது. அவன் ஓநாயை வளர்ப்பதைப் போலவே நாம் அணுவை பிளக்கிறோம், அணுவின் சக்தியைப் பெற்றுக் கொண்டு அணுக்கழிவுகளை சில ஆயிரம் வருடங்களுக்கு பாதுகாக்க முடியும் என்று அறியாமையுடன் நம்புகிறோம். சுனாமி, அணு உலை வெடிப்பு, மனித உயிர் அணு உற்பத்திக் குறைவு, நோய்கள் இவற்றில் இருந்து நாம் என்ன மாதிரியான பாடத்தைப் பெற்றுள்ளோம்? மேல் சொன்ன எல்லா விசயங்களும் இயற்கையின் சிறிய எதிர்வினைகள் மட்டுமே. உயிர்க்கண்ணிச்சூழலின் ஒரு முனையில் இருக்கும் மனித இனம் மற்ற எல்லாவற்றையும் அழித்துவிட்டால் மனித இனம் வாழ்தலின் தேவை என்ன? தேவை அற்ற நாம் இயற்கையின் இணைப்புக்கண்ணியில் இருந்து தானாகவே நீக்கப்படுவோம் இல்லையா?.
Wolf_Totem_Jiang_Rong_Books_Authors
ஜியாங் ரோங்
எழுதி இருப்பவரின் (ஜியாங் ரோங்) அனுபவங்களே புனைவாக இருப்பதாலும், நாடோடிகள், விவசாயிகள், குதிரைகள், நாய்கள், ஓநாய்கள், மான்கள், மர்மோட்டுகள், அன்னங்கள், வாத்துகள் என்று ஒவ்வொரு உயிரினத்தின் பழக்கவழக்கங்களையும் துல்லியமாகச் சொல்லி இருப்பதாலும் படைப்பின் மீதான நம்பிக்கை அதிகரிக்கிறது. பில்ஜி முற்றிலும் இயற்கை சார்ந்த மனிதன். இயற்கையுடன் முற்றிலும் அனுசரித்துச் செல்லும் அவருக்கு இயற்கை மேல் எந்தக் குற்றச்சாட்டும் இல்லை. சீனர்களோ பில்ஜிக்கு எதிர்நிலையில் இயற்கையை மறுத்து, அதை முற்றிலும் புறக்கணித்து வாழ முயல்கின்றனர். இந்த இரு வேறு புள்ளிகள் ஏற்படுத்தும் முரண்களின் இடையே இயற்கையைப் புரிந்துகொண்டு அதைத் தன் போக்கில் மாற்றி அமைக்க முயலும் ஜென்சென்னின் மனப்போராட்டம் நாவலில் சிறப்பாகச் சொல்லப்பட்டுள்ளது. அதேபோல கம்யுனிசம் தட்டையான ஒற்றைப்பார்வையில் செயலாக்கப்பட்டதை நாவலில் பல இடங்களில் ஜியாங் விமர்சிக்கிறார். அது இப்போதைய இந்திய ஒற்றைப்பார்வை முதலாளித்துவத்திற்கும் அப்படியே பொருந்துவதை நாம் உணரலாம்.
இந்த நாவலை ஒரு கருத்தாகப் புரிந்து கொள்ள, காந்தியின் வரி ஒன்றே போதுமானது. இயற்கையால் ஒவ்வொருவரின் தேவையையும் பூர்த்தி செய்ய முடியும், ஆனால் ஒற்றை மனிதனின் பேராசையை கூட அதனால் பூர்த்தி செய்ய முடியாது. இங்கே ஒற்றை மனிதன் என்பதை, ஒற்றைப்பார்வை கருத்தியல் (visone dimensional ideology) என்று கூட இட்டு நிரப்பலாம்.
வாசகன் தன் வாழ்வை ஏதோ ஒரு புள்ளியில் படைப்புடன் அடையாளப்படுத்திக் கொள்ள முடிந்தால், அது ஒரு நல்ல இலக்கியம். இந்த நாவல் உங்களை அப்படி உணரச் செய்யும் அளவிற்கு நம்மைச் சுற்றிக் காரணங்கள் நிரம்பி இருக்கின்றன. ஏனெனில், நாம் ஒவ்வொருவரும் ஜென்சென்னைப் போல, இயற்கையைப் புரிந்துகொள்ள நினைத்தோ, சீன விவசாயிகளைப் போல புரிந்து கொள்ள மறுத்தோ/முயலாமலோ அதைச் சுரண்டி, அழிக்கும் வேலையையே செய்கிறோம். நம்மிடையே இயற்கையை உணர்ந்த பில்ஜிகள் குறைவு, அதனால் – டெஞ்ஞருக்கு வேலை அதிகமிருப்பதாகவே தோன்றுகிறது.
c_mohan_Authors_Tamil_Writers_Translations_Onaai_Kula_sinnam
மொழிபெயர்ப்பைப் பற்றி இங்கே குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். சி.மோகனின் இந்த மொழிபெயர்ப்பு ஒரு சாதனை. வெகு சில எழுத்துப்பிழைகளைத் தவிர்த்து உள்ளடக்கம் சிறப்பாக உள்ளது. எந்த ஒரு வாசகனும் வாசிக்கும்படியான வேலையைச் செய்திருக்கும் அவருக்கும், இந்தப் புத்தகத்திற்காகவே பதிப்பாளரான இயக்குனர் வெற்றிமாறனுக்கும் என் அன்பு.
***
onai_kula_chinnam_Novels_Translation_Books_Tamil
ஓநாய் குலச்சின்னம்,
ஜியாங் ரோங் (எ) லூ ஜியாமின் – தமிழில் சி.மோகன்,
வெளியீடு: அதிர்வு பதிப்பகம்.
பக்கங்கள்: 671.
விலை: 500 ரூபாய்.
http://solvanam.com/?p=28609