Thursday, March 21, 2013

பரதேசியும் நானும் -3


பரதேசியும் நானும் -1
பரதேசியும் நானும் -2

முதலாளிகளாக இருந்த எங்கள் குடும்பங்கள், பெரும் பணம் சேர்த்து வாழும்போது, சோக்ராக்களும் ஓரளவு பணம் சம்பாதித்தனர். ஆனால் அவர்களும் மேல்நிலை அடிமைகளே, அவர்களின் பொருளாதார உயர்வு என்பது மனிதத் தன்மை அற்ற செயல்களின் மூலம் மட்டுமே வரும்.

ரெட் டீயில் தன் சுய ஆதாயத்திற்காக பாலியல் இன்பம் வழங்கும் ஒரு கதாப்பாத்திரம் இருக்கும். அது தன்னைப் போல அல்லாத ஒழுக்கம் சார்ந்து வாழும் பிறரை வன்மத்துடன் பழிவாங்கும். அதைப்  பாலா பரதேசியில், ஒரு சிறு காட்சி மூலம் காட்டியிருப்பார். அந்தப்பெண் (டார்லிங்) பின்னணியில் சிரிக்கும் போது, வள்ளியின் தேயிலைகள் சரியற்றவை என்று கொட்டப்படும் காட்சி. பாலியல் சுரண்டல்கள் - இது இரண்டு பக்கமும் உண்டு - பாலியல் இன்பம் மூலம் பலன்களை அனுபவித்தல் என்று கட்டற்ற ஒரு வாழ்வு அங்கே இருந்துள்ளது. எப்படி கறுப்பின அடிமைகள் முதலாளிக்களின் பாலியல் தேவைக்கும் பயன்படுத்தப் பட்டார்களோ அதே நிலைதான். உணவு என்பது தவிர வேறு எந்த பலன்களும் பெற முடியாத நிலையில் கிட்டத்தட்ட 3 தலைமுறைகள் ஒரே எஸ்டேட்-இல் வேலை செய்து இருக்கின்றனர்.

ஒரு முறை என் தாத்தா ஒருவரின் கணக்குப்பிள்ளை கப்பலில் இருந்து இறங்கி முதலாளி (என் தாத்தா) வீட்டிற்கு வராமல், அவரின் வீட்டிற்கு சென்றுவிட்டார். அடுத்த நிமிடம், அவரைத்தூக்கி வந்து, தூண் ஒன்றில் கட்டிவைத்து தோல் உரியும் வரை அடித்துள்ளனர். இவர்களுக்கே நிலைமை இப்படி என்றால், தோட்ட வேலை செய்பவர்கள் எப்படிப்பட்ட அடக்குமுறைகளுக்கு உள்ளாகி இருப்பார்கள்?

அடிமை முறை இல்லாமல் விவசாயம் இல்லை. ஏனெனில், மனித உழைப்பிற்கு பண மதிப்பு கொடுத்தால் விவசாய உற்பத்திப் பொருளுக்கு கற்பனைக்கு எட்டாத விலை வைக்க வேண்டிவரும். ஆகவே சமூகப்படியின் அடிமட்டத்தில் இருக்கும் கூலிகளும், சிறு/குறு விவசாயிகளும் சுரண்டப்படுகிறார்கள். இது காலங்காலமாக இருந்து வரும் ஒரு விஷயம். ஆனால் நாகரிக சமூகத்தில் திறந்த அடிமை முறைக்கு வேலை இல்லை. அதற்குப் பதிலாக இப்போது எந்திரங்கள் உபயோகிக்கப்படுகின்றன. இப்போதும் வேறு வழியாக சுரண்டப்படுவது அடிமட்ட மக்கள் மட்டுமே. இலவச அரிசி, டி.வி , நூறு நாள் வேலை திட்டம் என்பதெல்லாம் நவீன அடிமை முறை அன்றி வேறென்ன? அன்றைய முதலாளிகள் கொடுமைப்படுத்திக் கொன்றனர், இப்போது மெல்லக் கொல்லும் விஷமாக இலவசங்கள் இருக்கின்றன.

பாலாவின் பரதேசி ஒரு முழுமை பெற்ற படம் அல்ல, ஆனால் முழுமையை நோக்கி நகரும் ஒரு முயற்சி. பாலாவின் குழுவில் இருந்து இதைவிட முழுமையான படங்கள் வந்துவிட்டன. முக்கியமாக பருத்திவீரனும், சுப்பிரமணிபுரமும். அவற்றில் இருந்த detail பரதேசியில் இல்லைதான். ஆனால்  பரதேசியின் முக்கியத்துவம் என்பது கதையும் அதன் வழங்கப்பட்ட முறையும்தான். ஒரு கலைவடிவம் அதன் எல்லைகள் விரிக்கப்படும்போது உடனேயே முழுமை பெறுவதில்லை. முழுமை பெறுதல் என்பது எல்லையைக்  கொஞ்சம் நகர்த்தி வைத்தல், அதில் முழுமையை முயற்சித்தல், மீண்டும் அந்த எல்லையை நகர்த்தி வைத்தல் என்று போகும் ஒரு தொடர் நிகழ்வு. அவ்வகையில் பரதேசி தமிழ் சினிமாவின் பரப்பைக் கொஞ்சமேனும் விரிவாக்கி இருக்கிறது என்று தைரியமாகச் சொல்லலாம்.

பரதேசி பற்றிய சில குற்றச்சாட்டுகள்.

அது தலித் அடையாளத்துடன் கதை மாந்தரை அறிமுகப்படுத்தவில்லை.
டேனியலுக்கு நன்றி சொல்லவில்லை.
கதை - நாஞ்சில் நாடன், டேனியல் என்று போடவில்லை.
டேனியலை கோமாளி போல காட்டிவிட்டார்.
இந்துத்துவப்படம்.
இன்னும் பல.


இவற்றில் ஒன்றைக்கூட ஒரு நல்ல வாசகனோ, கவனிப்பாலனோ ஒத்துக்கொள்ளமாட்டான்.

ராசா ஒரு தலித் என்பதும்., அவன் வாழ்வது ஒரு தலித் கிராமம் என்பதும், நேர் காட்சிகளில் விளக்கப்படுகிறது. தண்டோரா போடுவது, மொட்டைவெளி சாமியை வணங்குவது, பெண்கள் கடவுளுக்கு அருகில் செல்ல நிற்க, படுக்க அனுமதிப்பதேல்லாம் தலித் வாழ்வியலில் மட்டுமே இன்றுவரை நடக்கும் விஷயம். தலித் கிராமங்கள் என்று சில உண்டு, அவர்களுக்கு எனத் தலைவர் உண்டு. பெரும்பாலும் நிலமற்றவர்கள். கூலிகள். அதனால்தான் சோக்ரா அழைத்தவுடன் கிளம்புகிறார்கள். ஆனால் இது தலித்தியம் பேசும் சினிமா அல்ல. ஒட்டுமொத்த அடிமை முறையை உங்கள் முன் நிகழ்த்தும் சினிமா. இதில் தலித்துகள் உண்டு, ஆதிக்க சாதி அடிமைகள் உண்டு - சோக்ரா - இவன் ஒரு மேல் மட்ட அடிமை மட்டுமே.

எனக்குத் தெரிந்து டானியலுக்கும் அவர் குடும்பத்திற்கும் ஒரு நன்றி அறிவிப்பு செய்யப்பட்டது.

மற்றொன்று, இது இந்துத்துவப் படைப்பு என்று சொல்வது. எதை எடுத்தாலும் இப்படி ஒரு குற்றச்சாட்டை வைக்கும் 'அறிவாளி'களால் நிறைந்து வருகிறது சூழல். எனக்கு மதநம்பிக்கையோ ஜாதி நம்பிக்கையோ இல்லை. நான் எந்த அளவிற்கு இந்துமத சனாதானத்தை எதிர்கிறேனோ, அதே அளவிற்கு மற்ற மத கோட்பாடுகளையும் எதிர்க்கிறேன். இதில் காட்டப்பட்டுள்ள கிருஸ்துவ மத விமர்சனம் தவறு என்றால், அது இந்துத்துவம் என்றால், இவர்கள் பெரியாரை, அம்பேத்காரை எள்ளளவும் அறியாதவர்கள். இப்படி விமர்சிப்பதன் மூலம் உண்மையான இந்துத்துவத்தை- மதவெறியை எளிமைப்படுத்திவிடுகிறார்கள். நாம் எதிர்க்க வேண்டியது அனைத்து மதவெறிகளையும்தான். ரெட் டீ நாவலில் எப்படி பூசாரிகள் அந்த எளிய மக்களை ஏமாற்றினார்கள் என்று டேனியல் சொல்லி இருப்பார். அது அப்படியே படத்தில் இருக்கிறது. அதை கிருஸ்துவ மத வெறி என்று எளிமைப் படுத்துவது எப்படிப்பட்ட கோமாளித்தனமோ அதே போல்தான் பரதேசி இந்துத்துவ அரசியலை முன்வைக்கிறது என்று சொல்வதும்.

அதே சமயம், ஓரளவேனும் விடுதலையை அளித்த கிருஸ்துவ மதம், எப்படி எளிய மக்களை, அவர்களின் பலவீனத்தைப் பயன்படுத்திக் கொண்டது என்பதும் எல்லோருக்கும் தெரிய வேண்டிய விசயம்தான்.

கதையை அப்படியே எடுக்கவில்லை என்று சொல்வோர் - திரைமொழி என்றால் என்ன என்றே தெரியாதவர்கள். அதைப் பற்றி சொல்ல ஒன்றும் இல்லை.

வசனம் - நாஞ்சில் நாடன் எனும்போது அவர் கதையை பயன்படுத்தி இருப்பது அவருக்கே தெரியாதா என்ன?

இந்தபடமே டேனியலுக்கு செய்யும் மரியாதைதான். 40 வருடம் சிலருக்கு மட்டுமே தெரிந்த அவர் உழைப்பு இப்போது படம் பார்ப்போர் அனைவருக்குமே தெரிந்துவிட்டது இல்லையா?

மற்றபடி, பரதேசியில் குறிப்பிடும் படியான நடிப்பு - தன்ஷிகாவுடையது.

படத்தின் குறைகள் என்றால், detail -ல் (வேலிக்காத்தான் தெரிவது, குழந்தை வயதாகாமல் இருப்பது, உடைகள் மற்றும் சில) கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். அதுபோக, வேதிகாவின் மிகை நடிப்பு, பின்னணி இசை.


மற்றபடி பார்க்க வேண்டிய படம். படம் பார்க்கும் முன்னோ, பார்த்துவிட்டோ இடலாக்குடி ராசாவையும், எரியும் பனிக்காடையும் படியுங்கள்.

இது தவிர, பர்மிய அடிமைகள், முதலாளிகள் வாழ்வை அறிய ப.சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி நாவல் படிக்கலாம்.


தொடர்புடைய பதிவுகள்:

எரியும் பனிக்காடு - எஸ்.ராமகிருஷ்ணன்
புயலிலே ஒரு தோணி - ஜெயமோகன்
எரியும் பனிக்காடு.(P.H.Daniel)  தமிழில் - இரா. முருகவேள். விடியல் பதிப்பகம்.
விலை ரூ.150.



No comments:

Post a Comment