Monday, March 18, 2013

பரதேசியும் நானும் -1

நேற்று நான் என் அம்மாவுடன் பரதேசி படம் பார்த்தேன். பாலாவின் ஆகச்சிறந்த படைப்பு. படத்தில் வரும் வெள்ளைக்காரர்களைவிட கொடூரமாக நடந்து கொண்ட - பெரும் எஸ்டேட்டை வைத்திருந்த  குடும்பத்தின் வாரிசான நான் - இந்தப் படத்தைப் பற்றி எழுதுவது முரண்தான். இது பரதேசி மற்றும் என் முன்னோர் வழியாகக் கேட்ட விஷயங்களின் தொகுப்பு மட்டுமே.  

சுமார் 4 வருடம் முன்பு எரியும் பனிக்காடு, யாமம் நாவல்களைப் படித்த பொது என் மனதில் தோன்றிய ஒரு விஷயம் - இவை ஒரு காட்சி வடிவமாக மாற முடியும் என்றால் எப்படிப் பட்ட படைப்பாக இருக்கும் என்பதுதான். ஆனால் நாவல் சினிமாவிற்கான வடிவம் அல்ல, சிறுகதையே சினிமாவிற்கான வடிவம். மிகச்சில நாவல்களே வெற்றிகரமான சினிமா வடிவம் பெற்றுள்ளன. எரியும் பனிக்காடு சினிமா வடிவம் பெறுதல் சாத்தியம் இல்லை என்றும், ஆனால் ஒரு சூழல் அமைந்தால் நெடுந்தொடராக வர வாய்ப்புள்ளதாகவும் நினைத்திருந்தேன்.

இடலாக்குடி ராசா - இது ஒரு குறும்படம் எடுப்பதற்கான கதை. ஒரு இரண்டு மணிநேர சினிமா ஒளிந்திருந்த கதை. ஒரு நாவலுக்கான கதாப்பாத்திரம் அவன்.


இரு வேறு கதைகள், இரு வேறு களம் ஆனால் ஒற்றை பொதுமை - அது பசி. பசி என்ற ஒன்றை அறியாத தலைமுறை இன்று நம்மைச்சுற்றி இருக்கிறது. ஆனால் பசியை மட்டுமே அறிந்த ஒரு தலைமுறை ஒன்று இருந்துள்ளது. அவர்கள் எப்படி உடல், மனம், ஆன்ம ரீதியில் பெருங்கூட்டமாகக் கொல்லப்பட்டனர் என்பது பற்றிய ஆவணம் "ரெட் டீ".


சில நாவல்களில் மற்றொரு நாவலின் கதைமாந்தர் உலவும்படியான கதை அமைப்புகள் உண்டு. இது சில சினிமாக்களிலும் பயன்படுத்தப்பட்ட வடிவமே. ஆனால் இந்த திரைக்கதைத் தொழில்நுட்பம் தமிழ் சினிமாவில் வெகுசில காமெடிக் காட்சிகளில் மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது.


இலக்கியத்தை படமாக மாற்றுவது வெகு கடினமான, தற்கொலைக்குச் சமமான முயற்சிதான். உதாரணமாக பாப்பிலான் நாவல் (Papillon)
 படிக்கும் போது தரும் மனஅனுபவத்தை பாப்பிலான் படம் தராது. அதே பாப்பிலான் நாவலின் சரியான திரை வடிவமாக நான் நினைப்பது ஷாஷான்க் ரெடெம்ப்ஷன் (Shawshank redemption) படத்தைதான். ஏனென்றால் நாவல் வாசகனின் கற்பனையில் நடைபெறும் நிகழ்வு. சினிமாவோ கண்ணெதிரே நடக்கும் கூத்து.அது படைப்பின் மீதான பார்வையாளனின் பங்களிப்பை வெகுவாகக் குறைக்கிறது. இந்த இடைவெளி நாவலைப் படித்த வாசகனைத் திருப்திப்படுத்தத் தவறுகிறது. மற்றொன்று நாவலின் பன்முகத்தன்மை - அது சினிமாவில் சத்தியமே இல்லாத ஒன்று. நாவலின் ஒற்றைச் சரடை எடுத்துக்கொண்டு சினிமாவாக எடுப்பதுதான் இருக்கும் ஒரே வழி.

பாலாவின் பரதேசி இரு வேறு நாவல்களின் கதைமாந்தரையும் களத்தையும் இணைப்பதில் வெற்றிபெற்று இருக்கிறது. அது ஒரு அசுர சாதனை. எப்படி என்றால் இடலாக்குடி ராசா - ரெட் டீ -குள் வாழ்ந்தால் என்ன நடக்கும்? என்ற கேள்வியும், இடலாக்குடி ராசாவின் ஆளுமையைப்  பன்முகப்படுத்தி ரெட் டீ யின் கதைமாந்தர்கள் ஒருமைப்படுத்தப்பட்டால் நமக்குக் கிடைப்பது "பரதேசி".

உண்மையில் ஒரு படைப்பின் மீது தன் பார்வை என்ன என்பதே ஒரு படைப்பை மறு உருவாக்க சரியான வழி. இதற்கு இரண்டு உதாரணங்களை சொல்லலாம்.


ஒன்று -பசொலினியின் The Gospel According to St. Matthew 
இரண்டு - லூயி புனுவலின் Robinson Crusoe (1954)


அப்படிச் சொல்லவேண்டிய ஒரு படம் பரதேசி.

தொடரும்....

No comments:

Post a Comment