Thursday, August 1, 2013

கதிரேசன் செட்டியாரின் காதல் - மா.கிருஷ்ணன்



மா. கிருஷ்ணன் ஒரு சூழலியலாளர். காலச்சுவடின் வெளியீடான மழைக்காலமும் குயிலோசையும்  (தொகுப்பாளர்: தியடோர் பாஸ்கரன்). பறவைகளும் வேடந்தாங்கலும் (பதிப்பாசிரியர்: பெருமாள் முருகன்) ஆகிய புத்தகங்களைப் படித்தபோதே இந்தப் புத்தகத்தைப் பற்றிய அறிமுகம் இருந்தது. மற்ற இரண்டு புத்தகங்களும் தமிழில் இருக்கும் மிக முக்கியமான சூழலியல் புத்தகங்கள்.

சூழலியல் புத்தகங்கள் இரண்டு வகையாக எழுதப்படுகின்றன. ஒன்று வெறும் புத்தக அறிவுடன் எழுதப்படும் Desk Work . மற்றொன்று சூழலியல் செயல்பாட்டாளர்களால் எழுதப்படுபவை.

மா.கிருஷ்ணன் இரண்டாம் வகையை சேர்ந்தவர். புத்தகம் எழுதுவது, உயிரினங்களைப் படம் எடுத்தல், படங்களை வரைதல், இலக்கியங்களில் இருந்து பெயர்களை மறு உபயோகப் படுத்துவது என்று அவர் நேரடி அனுபவங்களை எழுதக்கூடியவர்.

இப்போது கதிரேசன் செட்டியாரின் காதலுக்கு வருவோம்.இது ஒரு துப்பறியும் கதை.

கதிரேசன் செட்டியாரின் தோட்டவீட்டில் அவரின் வேலைக்காரன் கொலை செய்யப்படுகிறான். காவலுக்கு இருக்கும் கொம்பை நாயும் கொல்லப்படுகிறது. அதே நேரம் கோவில் நகை திருடு போகிறது. போலீஸ் வருகிறது, அவர்களுக்கு எந்தத் துப்பும் கிடைக்கவில்லை. தொடர்ந்த விசாரணை முடிவில் யார் குற்றவாளி என்று தெரிகிறது.

பொதுவாக துப்பறியும் நாவல்களுக்கு என்று ஒரு வரை முறை இருக்கிறது.

-நேரடியான கதை.
-குற்றம் தெளிவானதாக அதே சமயம் எல்லாக் கதைமாந்தர் மேலும் வாசகனுக்கு சந்தேகம் வரவேண்டும்.
-Detail - மிக முக்கியம்.
-கதை உள்ளே செல்லச் செல்ல சந்தேகம் எல்லோர் மேலும் வர வேண்டும்.
-முடிவை நெருங்க நெருங்க சந்தேகம் ஒரு குறிப்பிட்ட நபரை நோக்கியோ அல்லது குழுவை நோக்கியோ திரும்ப வேண்டும்.
-இறுதியில் குற்றவாளி பற்றிய - யாரும் எதிர்பாராத ஒரு முடிவு வேண்டும். (ஆனால் அதற்கான குறிப்பு நாவலில் முதலிலேயே - முடிந்தால் முதல் அத்தியாயத்திலேயே இருக்க வேண்டும்.)

இந்த நாவல் மேற்கொண்ட விசயங்கள் அனைத்தும் கொண்ட ஒன்று.

வழக்கமான துப்பறியும் கதைகளில் விசேச நுண்ணுணர்வு கொண்ட ஒருவர் எல்லாவற்றையும்  தீர்த்து வைப்பார் . அதுதான் இருப்பதிலேயே மோசமான அணுகுமுறை. (sherlock holmes போல).

இதில் கொம்பை நாயின் படம் ஒன்று அட்டையில் உள்ளது, அது மா.கிருஷ்ணனே வரைந்தது. அதே போல கொம்பைக் குட்டியை வளர்க்கும் முறை, உணவு முறை, நாய் இறந்தால் கிடக்கும் நிலை இவற்றை சரியாகச் சொல்லி இருப்பார். இது இங்கே இப்போது கதை/ இலக்கியம் எழுதும் பலரும் செய்யாதது. மற்றொன்று கதையில் இறுதி வரியில் தான் கதையே இருக்கிறது. நாவலின் தலைப்பும் கூட அங்கே தான் ஆரம்பிக்கிறது. அது வாசகனை கதையின் முடிவுக்குப் பிறகும் உள்ள கதையை யோசிக்கச் செய்கிறது. அது ஒரு நல்ல துப்பறியும் நாவலின் இலக்கணம்.

நாவலில் குறை என்றால், எல்லோரும் பிராமண பாஷையைப் பேசுவது. அதிலிருந்து நடைமுறைத் தமிழுக்கு மாறுவது, மீண்டும் பிராமண பாஷைக்கு மாறுவது. இனிவரும் பதிப்புகளில்(?) யாரேனும் இந்தக் குறையைச் சரி செய்தால், இன்னும் பலரால் வாசிக்கப்பட வாய்ப்புள்ளது.

அடுத்து கதை நடக்கும் காலம்: அது நிச்சயமாக 1989 அல்ல. அதை 1940-1950 க்குள் என்று வைத்து இருக்கலாம். கதை மாந்தர் மொழி,களம், வாகன வசதிகள் எல்லாம் அதையே சொல்கின்றன. இது ஒரு மிகப் பெரிய குறை.

நிச்சயமாக இது தமிழில் இருக்கும் சரியான (!) துப்பறியும் நாவல்.

வெளியீடு: மதுரை பிரஸ்

"ஸ்கூப்" - குல்தீப் நய்யார்


குல்தீப் நய்யார் எழுதிய "ஸ்கூப்" புத்தகத்தைப் படித்தேன். அந்தப் புத்தகம் சுதந்திரப் போராட்ட காலத்தில் இருந்து, பாகிஸ்தான் பிரிவினை, சுதந்திரம், காந்தியின் மரணம், நேருவின் ஆட்சி - மரணம், லால் பகதூர் சாஸ்த்ரி ஆட்சி - மரணம், இந்திரா - காமராஜ் மோதல், எமர்ஜென்சி, பாகிஸ்தான் அணு ஆயுத உற்பத்தி, புலிகள் மீதான இந்திய அரசின் பார்வை, வாஜ்பாய் ஆட்சி வரை துண்டு துண்டாக விவரிக்கிறது. இதில் பெரும்பாலும் சுவாரஸ்யமான விஷயங்கள் ஏதும் இல்லை. அதே போல பொது மக்களுக்குத் தெரியாத விசயங்களை எண்ணிவிடலாம்.

எல்லா பெரிய ஆளுமைகளும் சாதாரண மக்களைப் போல குழம்பித்தான் இருப்பார்கள், நம்புவார்கள், துரோகம் செய்வார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள இதை வாசிக்கலாம். மற்றபடி வரலாறு, ரகசியம், உண்மைகளை (!!!!) எதிர்பார்த்தால் ஏமாற்றம்தான் ஏற்படும். சம்பவங்கள் நடைபெற்ற போது கூட, இவை ஸ்கூப் ஆக இருந்து இருக்குமா? என்று நான் பல இடங்களில் யோசித்தேன். ஏனென்றால் பல விஷயங்கள் - மொக்கையானவை.


அவரவருக்கு தெரிந்த ஆனால் சொல்லப்படாத விசயங்களை, வரலாற்றை வயதான பிறகாவது சொல்லலாம். ஆனால் இங்கே குல்தீப் நய்யார் சொல்லி இருப்பது எதுவும் அப்படிப் பட்டவை அல்ல. இதில் இருக்கும் நிகழ்வுகளால் யாருக்கும் பலனில்லை. 



உதாரணமாக சாஸ்த்ரியின் மரணம், சுற்றி வளைத்து அவர் இயற்கையாகவே மறைந்தார் என்று சொல்லி இருக்கிறார். அதுதான் எங்களுக்குத் தெரியுமே. அதில் புதுசாக ஏதேனும் சொல்ல நினைத்தால் சொல்லி இருக்கலாம். இல்லாவிட்டால் அந்த சம்பவத்தை ஒற்றை வரியில் சொல்லிவிட்டுச் செல்லலாம். பத்துப் பக்கம் அதே அரசாங்கம் சொன்ன ரிப்போர்ட் -ஐச்   சொல்வதில் என்ன ஸ்கூப் என்று எனக்குப் புரியவே இல்லை. இது மாதிரி பல விஷயங்கள் உள்ள புத்தகம் இது. 



ஒன்று மட்டும் உறுதி - இது உண்மையான வரலாறும் இல்லை - ஸ்கூப்பும் இல்லை.

நேரம் இருந்தால் 1.5 மணி நேரத்தில் வாசிக்கலாம். இல்லை என்றால் அதே நேரத்தில் நீங்கள் இன்னும் உண்மைக்கு நெருக்கமான வரலாற்றை இணையத்திலேயே வாசிக்கலாம்.வெளியீடு: ஸ்கூப் - மதுரை பிரஸ், மாம்பலம்.

Tuesday, July 16, 2013

Royal Enfield - Classic 350 - Review - ராயல் என்பீல்ட் - கிளாசிக் 350 - 3000 கிலோ மீட்டருக்குப் பிறகு.



எல்லாக் குழந்தைகளையும் போல புல்லெட் ஆசை எனக்கும் இருந்தது. ஆனால் புல்லெட் ஒன்றை வாங்கி ஓட்டுவதற்கு எனக்கு 30 வருடங்கள் தேவைப்பட்டது. :(

ஒரு வழியாக கடந்த வருடம் ஜூலை மாதம் கருப்பு நிற ராயல் என்பீல்ட் கிளாசிக் 350 புல்லெட்- ஒன்றை அடையார் என்பீல்ட் ஷோரூமில் புக் செய்தேன். காத்திருப்புக் காலம் 8 மாதம் என்றார்கள். நான் பிப்ரவரியில் இருந்து ஒவ்வொரு வாரமும் போனில் பேசி நொந்து, போங்கடா நீங்களும் உங்க புல்லெட் வண்டியும் என்று கடுப்பாகிப் போய் விட்டுவிட்டேன். திடீரென 3 மாதம் முன்பு, அவர்களே என்னை அழைத்து பணத்தையும், ஆவணங்களையும் வாங்கிக் கொண்டு, 15 நாள் கழித்து வண்டியைக் கொடுத்தனர். 


வண்டியின் விலை : 128500/-
எக்ஸ்ட்ரா பிட்டிங் : 4000/- (அடிசனல் சைலென்சர், சேப்டி பார் - Crash Bar)



முதல் முறையாக ஒட்டிய போதே, அட அட அட. அந்த வண்டியின் சப்தம், மெருகு, சொகுசு என அனைத்தும் அருமை. வேறென்ன சொல்வது. அடுத்து 15 நாளில் 500 கிலோ மீட்டர் கடந்ததும் முதல் சர்வீஸ். 3 மாதத்தில் 3000 கிலோ மீட்டர் - இரண்டாவது சர்வீஸ். 
நல்லவை:
1. வண்டி ஓட்டுவதை நல்ல அனுபவமாகுவது.
2. கண்டிப்பாக முதுகு வலி வராது. (நான் இந்த வண்டியை இதற்காகவும் வாங்கினேன்)
3. வெறித்தனமாக வண்டி ஓட்டுபவர்களை நிதானத்திற்கு கொண்டுவரும். :)
4. பழைய புல்லேட்டுகளுடன்  ஒப்பிடும் பொது அதிர்வு குறைவு.
5. மோசமான சாலையிலும் வண்டியை எந்த யோசனையும் இல்லாமல் ஓட்டலாம்.
6. மைலேஜ் 40-43 தருகிறது. (நகருக்குள்)
7. பாதுகாப்பு. ( என் வண்டி வாங்கிய 5ம்  நாள் ஒரு ஆட்டோ மோதியது, என் வண்டிக்கு ஒன்றுமே ஆகவில்லை, ஆட்டோவின் ஒரு பகுதி நெலிந்து விட்டது :)).
8. வயதானவர்கள் கூட அமரும் படியான பில்லியன்.

அல்லவை:
1. காத்திருப்புக் காலம். சொன்ன தேதியில் கொடுப்பதில்லை.
2. சர்வீஸ் டெலிவரி மிக மோசம். ( 9 மணிக்கு போனால் 10 மணிக்கு வண்டியைத் தருவார்கள்).
3. வண்டியை சுத்தம் செய்வது கொஞ்சம் கஷ்டம்.
4. தொடக்கத்தில் கியர் கொஞ்சம் பிரச்சனை செய்யும்.
5. டிஸ்க் ப்ரேக் கொஞ்சம் சத்தம் தருகிறது.
6. எகானாமிக் மக்கள் மைலேஜ் பற்றி யோசிக்கலாம். :(


மற்றபடி ஒரு மாதிரி நமக்குத் தன்னம்பிக்கை அளித்து, நிதானத்திற்குக் கொண்டுவருவதை கடந்த 3 மாதத்தில் உணர முடிகிறது.



அடுத்து ஒரு நீண்ட தூரப் பயணத்தைச் செய்துவிட்டு அந்த அநுபவத்தையும்  பதிய வேண்டும்.

Thursday, March 21, 2013

பரதேசியும் நானும் -3


பரதேசியும் நானும் -1
பரதேசியும் நானும் -2

முதலாளிகளாக இருந்த எங்கள் குடும்பங்கள், பெரும் பணம் சேர்த்து வாழும்போது, சோக்ராக்களும் ஓரளவு பணம் சம்பாதித்தனர். ஆனால் அவர்களும் மேல்நிலை அடிமைகளே, அவர்களின் பொருளாதார உயர்வு என்பது மனிதத் தன்மை அற்ற செயல்களின் மூலம் மட்டுமே வரும்.

ரெட் டீயில் தன் சுய ஆதாயத்திற்காக பாலியல் இன்பம் வழங்கும் ஒரு கதாப்பாத்திரம் இருக்கும். அது தன்னைப் போல அல்லாத ஒழுக்கம் சார்ந்து வாழும் பிறரை வன்மத்துடன் பழிவாங்கும். அதைப்  பாலா பரதேசியில், ஒரு சிறு காட்சி மூலம் காட்டியிருப்பார். அந்தப்பெண் (டார்லிங்) பின்னணியில் சிரிக்கும் போது, வள்ளியின் தேயிலைகள் சரியற்றவை என்று கொட்டப்படும் காட்சி. பாலியல் சுரண்டல்கள் - இது இரண்டு பக்கமும் உண்டு - பாலியல் இன்பம் மூலம் பலன்களை அனுபவித்தல் என்று கட்டற்ற ஒரு வாழ்வு அங்கே இருந்துள்ளது. எப்படி கறுப்பின அடிமைகள் முதலாளிக்களின் பாலியல் தேவைக்கும் பயன்படுத்தப் பட்டார்களோ அதே நிலைதான். உணவு என்பது தவிர வேறு எந்த பலன்களும் பெற முடியாத நிலையில் கிட்டத்தட்ட 3 தலைமுறைகள் ஒரே எஸ்டேட்-இல் வேலை செய்து இருக்கின்றனர்.

ஒரு முறை என் தாத்தா ஒருவரின் கணக்குப்பிள்ளை கப்பலில் இருந்து இறங்கி முதலாளி (என் தாத்தா) வீட்டிற்கு வராமல், அவரின் வீட்டிற்கு சென்றுவிட்டார். அடுத்த நிமிடம், அவரைத்தூக்கி வந்து, தூண் ஒன்றில் கட்டிவைத்து தோல் உரியும் வரை அடித்துள்ளனர். இவர்களுக்கே நிலைமை இப்படி என்றால், தோட்ட வேலை செய்பவர்கள் எப்படிப்பட்ட அடக்குமுறைகளுக்கு உள்ளாகி இருப்பார்கள்?

அடிமை முறை இல்லாமல் விவசாயம் இல்லை. ஏனெனில், மனித உழைப்பிற்கு பண மதிப்பு கொடுத்தால் விவசாய உற்பத்திப் பொருளுக்கு கற்பனைக்கு எட்டாத விலை வைக்க வேண்டிவரும். ஆகவே சமூகப்படியின் அடிமட்டத்தில் இருக்கும் கூலிகளும், சிறு/குறு விவசாயிகளும் சுரண்டப்படுகிறார்கள். இது காலங்காலமாக இருந்து வரும் ஒரு விஷயம். ஆனால் நாகரிக சமூகத்தில் திறந்த அடிமை முறைக்கு வேலை இல்லை. அதற்குப் பதிலாக இப்போது எந்திரங்கள் உபயோகிக்கப்படுகின்றன. இப்போதும் வேறு வழியாக சுரண்டப்படுவது அடிமட்ட மக்கள் மட்டுமே. இலவச அரிசி, டி.வி , நூறு நாள் வேலை திட்டம் என்பதெல்லாம் நவீன அடிமை முறை அன்றி வேறென்ன? அன்றைய முதலாளிகள் கொடுமைப்படுத்திக் கொன்றனர், இப்போது மெல்லக் கொல்லும் விஷமாக இலவசங்கள் இருக்கின்றன.

பாலாவின் பரதேசி ஒரு முழுமை பெற்ற படம் அல்ல, ஆனால் முழுமையை நோக்கி நகரும் ஒரு முயற்சி. பாலாவின் குழுவில் இருந்து இதைவிட முழுமையான படங்கள் வந்துவிட்டன. முக்கியமாக பருத்திவீரனும், சுப்பிரமணிபுரமும். அவற்றில் இருந்த detail பரதேசியில் இல்லைதான். ஆனால்  பரதேசியின் முக்கியத்துவம் என்பது கதையும் அதன் வழங்கப்பட்ட முறையும்தான். ஒரு கலைவடிவம் அதன் எல்லைகள் விரிக்கப்படும்போது உடனேயே முழுமை பெறுவதில்லை. முழுமை பெறுதல் என்பது எல்லையைக்  கொஞ்சம் நகர்த்தி வைத்தல், அதில் முழுமையை முயற்சித்தல், மீண்டும் அந்த எல்லையை நகர்த்தி வைத்தல் என்று போகும் ஒரு தொடர் நிகழ்வு. அவ்வகையில் பரதேசி தமிழ் சினிமாவின் பரப்பைக் கொஞ்சமேனும் விரிவாக்கி இருக்கிறது என்று தைரியமாகச் சொல்லலாம்.

பரதேசி பற்றிய சில குற்றச்சாட்டுகள்.

அது தலித் அடையாளத்துடன் கதை மாந்தரை அறிமுகப்படுத்தவில்லை.
டேனியலுக்கு நன்றி சொல்லவில்லை.
கதை - நாஞ்சில் நாடன், டேனியல் என்று போடவில்லை.
டேனியலை கோமாளி போல காட்டிவிட்டார்.
இந்துத்துவப்படம்.
இன்னும் பல.


இவற்றில் ஒன்றைக்கூட ஒரு நல்ல வாசகனோ, கவனிப்பாலனோ ஒத்துக்கொள்ளமாட்டான்.

ராசா ஒரு தலித் என்பதும்., அவன் வாழ்வது ஒரு தலித் கிராமம் என்பதும், நேர் காட்சிகளில் விளக்கப்படுகிறது. தண்டோரா போடுவது, மொட்டைவெளி சாமியை வணங்குவது, பெண்கள் கடவுளுக்கு அருகில் செல்ல நிற்க, படுக்க அனுமதிப்பதேல்லாம் தலித் வாழ்வியலில் மட்டுமே இன்றுவரை நடக்கும் விஷயம். தலித் கிராமங்கள் என்று சில உண்டு, அவர்களுக்கு எனத் தலைவர் உண்டு. பெரும்பாலும் நிலமற்றவர்கள். கூலிகள். அதனால்தான் சோக்ரா அழைத்தவுடன் கிளம்புகிறார்கள். ஆனால் இது தலித்தியம் பேசும் சினிமா அல்ல. ஒட்டுமொத்த அடிமை முறையை உங்கள் முன் நிகழ்த்தும் சினிமா. இதில் தலித்துகள் உண்டு, ஆதிக்க சாதி அடிமைகள் உண்டு - சோக்ரா - இவன் ஒரு மேல் மட்ட அடிமை மட்டுமே.

எனக்குத் தெரிந்து டானியலுக்கும் அவர் குடும்பத்திற்கும் ஒரு நன்றி அறிவிப்பு செய்யப்பட்டது.

மற்றொன்று, இது இந்துத்துவப் படைப்பு என்று சொல்வது. எதை எடுத்தாலும் இப்படி ஒரு குற்றச்சாட்டை வைக்கும் 'அறிவாளி'களால் நிறைந்து வருகிறது சூழல். எனக்கு மதநம்பிக்கையோ ஜாதி நம்பிக்கையோ இல்லை. நான் எந்த அளவிற்கு இந்துமத சனாதானத்தை எதிர்கிறேனோ, அதே அளவிற்கு மற்ற மத கோட்பாடுகளையும் எதிர்க்கிறேன். இதில் காட்டப்பட்டுள்ள கிருஸ்துவ மத விமர்சனம் தவறு என்றால், அது இந்துத்துவம் என்றால், இவர்கள் பெரியாரை, அம்பேத்காரை எள்ளளவும் அறியாதவர்கள். இப்படி விமர்சிப்பதன் மூலம் உண்மையான இந்துத்துவத்தை- மதவெறியை எளிமைப்படுத்திவிடுகிறார்கள். நாம் எதிர்க்க வேண்டியது அனைத்து மதவெறிகளையும்தான். ரெட் டீ நாவலில் எப்படி பூசாரிகள் அந்த எளிய மக்களை ஏமாற்றினார்கள் என்று டேனியல் சொல்லி இருப்பார். அது அப்படியே படத்தில் இருக்கிறது. அதை கிருஸ்துவ மத வெறி என்று எளிமைப் படுத்துவது எப்படிப்பட்ட கோமாளித்தனமோ அதே போல்தான் பரதேசி இந்துத்துவ அரசியலை முன்வைக்கிறது என்று சொல்வதும்.

அதே சமயம், ஓரளவேனும் விடுதலையை அளித்த கிருஸ்துவ மதம், எப்படி எளிய மக்களை, அவர்களின் பலவீனத்தைப் பயன்படுத்திக் கொண்டது என்பதும் எல்லோருக்கும் தெரிய வேண்டிய விசயம்தான்.

கதையை அப்படியே எடுக்கவில்லை என்று சொல்வோர் - திரைமொழி என்றால் என்ன என்றே தெரியாதவர்கள். அதைப் பற்றி சொல்ல ஒன்றும் இல்லை.

வசனம் - நாஞ்சில் நாடன் எனும்போது அவர் கதையை பயன்படுத்தி இருப்பது அவருக்கே தெரியாதா என்ன?

இந்தபடமே டேனியலுக்கு செய்யும் மரியாதைதான். 40 வருடம் சிலருக்கு மட்டுமே தெரிந்த அவர் உழைப்பு இப்போது படம் பார்ப்போர் அனைவருக்குமே தெரிந்துவிட்டது இல்லையா?

மற்றபடி, பரதேசியில் குறிப்பிடும் படியான நடிப்பு - தன்ஷிகாவுடையது.

படத்தின் குறைகள் என்றால், detail -ல் (வேலிக்காத்தான் தெரிவது, குழந்தை வயதாகாமல் இருப்பது, உடைகள் மற்றும் சில) கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். அதுபோக, வேதிகாவின் மிகை நடிப்பு, பின்னணி இசை.


மற்றபடி பார்க்க வேண்டிய படம். படம் பார்க்கும் முன்னோ, பார்த்துவிட்டோ இடலாக்குடி ராசாவையும், எரியும் பனிக்காடையும் படியுங்கள்.

இது தவிர, பர்மிய அடிமைகள், முதலாளிகள் வாழ்வை அறிய ப.சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி நாவல் படிக்கலாம்.


தொடர்புடைய பதிவுகள்:

எரியும் பனிக்காடு - எஸ்.ராமகிருஷ்ணன்
புயலிலே ஒரு தோணி - ஜெயமோகன்
எரியும் பனிக்காடு.(P.H.Daniel)  தமிழில் - இரா. முருகவேள். விடியல் பதிப்பகம்.
விலை ரூ.150.



Monday, March 18, 2013

பரதேசியும் நானும் - 2

பரதேசியும் நானும் - 1

பரதேசியைப் பற்றி இதுவரை இணையத்தில் வந்த விமர்சனங்களை - முக்கியமாக intellectual என்று இணையத்தில் உலவும் பலரும் படத்தை வலிந்து கீழ்மைப்படுத்துவதைக் காண முடிகிறது.

விமர்சனங்கள் எந்த முறைமைகளும் இன்றி, எப்படித்  தனிமனிதனின் விருப்பம் சார்ந்து அமைக்கப்படுகின்றன என்று இதன் மூலம் யாரும் புரிந்து கொள்ளலாம்.

சரி பரதேசிக்கு வருவோம்.

என் அப்பாவின் குடும்பம், என் அம்மாவின் குடும்பம், என் அப்பத்தாவின் குடும்பம் இவை அனைத்துமே பெரும் பேரும் , பொருளும் கொண்ட குடும்பங்கள். அவ்வளவு பெரும் பொருளை எப்படி சம்பாதித்தார்கள் என்பதில்தான் பல உண்மைக்கதைகள் இருக்கின்றன. அவ்வளவு பொருளும் அடிமைகளின் ரத்தத்தால் ஊறியவை மட்டுமே.

அதற்கு முன் செட்டிநாட்டு அரண்மனைகளையும் அங்கே நிலவும் சாதியக் கட்டுமானங்களையும் புரிந்து கொள்ள வேண்டும். அந்த அரண்மனைகள் முழுக்கக் கட்டப்பட்டது பர்மிய அடிமைகளின் உழைப்புச் சுரண்டலாலும், இந்திய கூலிகளின் பசியாலும்தான். ஒவ்வொரு வீடும் நான்கு அல்லது ஐந்து பிரிவுகளைக் கொண்டது. குறைந்த பட்சமாக 40 சென்ட் இடத்தில் இருந்து சில ஏக்கர் வரையிலான அளவுகளைக் கொண்ட கட்டிடங்கள். தரையிலிருந்து 10 அடிவரை உயர்த்தப்பட்ட அடித்தளங்கள்  இன்ச் இஞ்சாக செதுக்கப்பட்ட வெள்ளை, கருங்கற்களையும் கொண்டு அமைக்கப்பட்டன. முழுக்க முழுக்க பர்மாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தேக்கு மரங்களைக் கொண்டு இளைத்து இளைத்து செய்யப்பட கதவுகள், ஜன்னல்கள், அறைகலன்கள் கொண்டு நிறைந்து கிடக்கும். இத்தாலியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மார்பிள் கற்கள், ஓடுகளால் தரைகள் அலங்கரிக்கப் பட்டு இருக்கும். ஒவ்வொரு வீடும் கட்டி முடிக்க 5 முதல் 30 வருடங்கள் வரை ஆகி இருக்கிறது. இவற்றுக்கான பணம் எங்கே இருந்து வந்து இருக்கும்?

இங்கே தான் ஆரம்பிக்கிறது அடிமை முறையும் உழைப்புச் சுரண்டலும். ஒவ்வொரு செட்டிநாட்டு நபருக்கும் இரண்டு விதமான வேலைகள் சாத்தியமாக இருந்தன.

ஒன்று பர்மாவில் போய் வட்டிக் கடை வைப்பது.
இரண்டு எஸ்டேட் தொடர்பான வேலைகள்.

முதலாவதில் செட்டியார்களும், இரண்டாவதில் கள்ளர் இன மக்களும் ஈடுபட்டனர். ஆனால் இருவரும் கலந்தே இந்தத் தொழில்களைச் செய்தனர் என்றே சொல்லலாம். எப்படி என்றால், முதலில் போய் வட்டிக்குக்கொடுப்பது, பின் தொழிலைக் கற்றுக் கொண்டு தனியே கடை வைத்து, கணக்குத் தெரியாத  பர்மிய மக்களை ஏமாற்றி பொருள் சேர்த்து பின் அவர்களின் இடங்களை பெரும் அளவில் வாங்கிக் குவிப்பது/ ஆக்கிரமிப்பது. பின் அவர்களையே அடிமைகள் ஆக்கி வேலை செய்ய வைப்பது அல்லது இங்கே இருந்து அடிமைகளாக மக்களைக் (பெரும்பாலும் தலித்துகள்) கொண்டு சென்று வேலை வாங்குவது.  இந்த இடத்தில்தான் அடிமைகளை "மேய்க்கக்" கூடிய, சற்றும் இரக்கம் அற்ற, உடல் உரம் மிக்க கங்காணிகளின் தேவை ஏற்படுகிறது.  அதற்காக செட்டிநாட்டில் இருந்து பெரும் அளவில் ஆதிக்க சாதியினர் அனுப்பப்பட்டனர்.

எஸ்டேட் வைத்து இருந்தவர்கள் "முதலாளி வீடு" என்றும், இந்தக் கங்காணிகள் "சோக்ரா" என்றும் சொல்லப்பட்டனர். இந்தக் குடும்பங்கள் இன்றும் "சொக்கரா வீடு/ வகையறா" என்றுதான் அழைக்கப்படுகின்றனர். (எனது சொந்தக்காரர்கள் சிலரின் குடும்பங்கள் இன்றும் இப்படித்தான் அழைக்கப்படுகின்றன). இவை தவிர கணக்கு வழக்குப் பார்ப்பதற்காக என்று சிலர் அனுப்பப்பட்டனர். அவர்கள் கணக்கு பிள்ளை வீடு என்று அழைக்கப்பட்டனர். 

இவற்றில் முதலாளிகள் என்போர் பெரும்பாலும் குட்டி அரசர்கள்தான். பெரும் பணம், ஏகப்பட்ட வீடுகள், பல மனைவிகள், உல்லாச வாழ்க்கை, குடி, கூத்து, அராஜகம் என்று பெரும் டாம்பீக வாழ்க்கை வாழ்வது மட்டுமே ஒரே வேலை.உதாரணத்திற்கு என் அப்பத்தாவின் அப்பாவிற்கு 5 மனைவிகள், கணக்கற்ற பிள்ளைகள், 4 பெரிய பங்களாக்கள், சில கிராமங்கள் சொந்தமாக இருந்தது. இவற்றை பராமரிக்க பணம் பர்மாவின் எஸ்டேட்டுகளில் இருந்து வந்திருக்கிறது. எப்படி வந்தது என்றால், பர்மிய/இந்திய அடிமைகள் ரத்தம் சிந்தச்சிந்த இங்கே வரைமுறை அற்ற வாழ்வை இவர்கள் வாழ்ந்துள்ளனர்.

கணக்குப்பிள்ளைகள் இரண்டு பக்கமும் சுரண்டுபவர்கள், படத்தில் இப்படி ஒரு கதாப்பாத்திரத்தின் தேவை இல்லை.

உண்மையில் எரியும் பனிக்காடும் சரி, பரதேசியும் சரி சொன்னதும் காட்டியதும் மிகக்குறைவே.

பரதேசி படத்தில் வரும் ஊர்களான சாலூரும், கோடாங்கிபட்டியும் என் ஊருக்கு மிக அருகில் இருக்கும் ஊர்கள்தான். கதை என்னவோ திருநெல்வேலியில் நடந்து இருந்தாலும் இந்த ஊர்களின் பெயர் பரதேசி படத்தின் ஒளிப்பதிவாளர் செழியானால் பாலாவுக்குச் சொல்லப்பட்டு இருக்கலாம். ஏனென்றால் அண்ணன் செழியனின் ஊரான நாட்டரசன்கோட்டையும் எங்கள் ஊருக்கு அருகிலான ஊர்தான்.

தொடரும்....

பரதேசியும் நானும் -1

நேற்று நான் என் அம்மாவுடன் பரதேசி படம் பார்த்தேன். பாலாவின் ஆகச்சிறந்த படைப்பு. படத்தில் வரும் வெள்ளைக்காரர்களைவிட கொடூரமாக நடந்து கொண்ட - பெரும் எஸ்டேட்டை வைத்திருந்த  குடும்பத்தின் வாரிசான நான் - இந்தப் படத்தைப் பற்றி எழுதுவது முரண்தான். இது பரதேசி மற்றும் என் முன்னோர் வழியாகக் கேட்ட விஷயங்களின் தொகுப்பு மட்டுமே.  

சுமார் 4 வருடம் முன்பு எரியும் பனிக்காடு, யாமம் நாவல்களைப் படித்த பொது என் மனதில் தோன்றிய ஒரு விஷயம் - இவை ஒரு காட்சி வடிவமாக மாற முடியும் என்றால் எப்படிப் பட்ட படைப்பாக இருக்கும் என்பதுதான். ஆனால் நாவல் சினிமாவிற்கான வடிவம் அல்ல, சிறுகதையே சினிமாவிற்கான வடிவம். மிகச்சில நாவல்களே வெற்றிகரமான சினிமா வடிவம் பெற்றுள்ளன. எரியும் பனிக்காடு சினிமா வடிவம் பெறுதல் சாத்தியம் இல்லை என்றும், ஆனால் ஒரு சூழல் அமைந்தால் நெடுந்தொடராக வர வாய்ப்புள்ளதாகவும் நினைத்திருந்தேன்.

இடலாக்குடி ராசா - இது ஒரு குறும்படம் எடுப்பதற்கான கதை. ஒரு இரண்டு மணிநேர சினிமா ஒளிந்திருந்த கதை. ஒரு நாவலுக்கான கதாப்பாத்திரம் அவன்.


இரு வேறு கதைகள், இரு வேறு களம் ஆனால் ஒற்றை பொதுமை - அது பசி. பசி என்ற ஒன்றை அறியாத தலைமுறை இன்று நம்மைச்சுற்றி இருக்கிறது. ஆனால் பசியை மட்டுமே அறிந்த ஒரு தலைமுறை ஒன்று இருந்துள்ளது. அவர்கள் எப்படி உடல், மனம், ஆன்ம ரீதியில் பெருங்கூட்டமாகக் கொல்லப்பட்டனர் என்பது பற்றிய ஆவணம் "ரெட் டீ".


சில நாவல்களில் மற்றொரு நாவலின் கதைமாந்தர் உலவும்படியான கதை அமைப்புகள் உண்டு. இது சில சினிமாக்களிலும் பயன்படுத்தப்பட்ட வடிவமே. ஆனால் இந்த திரைக்கதைத் தொழில்நுட்பம் தமிழ் சினிமாவில் வெகுசில காமெடிக் காட்சிகளில் மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது.


இலக்கியத்தை படமாக மாற்றுவது வெகு கடினமான, தற்கொலைக்குச் சமமான முயற்சிதான். உதாரணமாக பாப்பிலான் நாவல் (Papillon)
 படிக்கும் போது தரும் மனஅனுபவத்தை பாப்பிலான் படம் தராது. அதே பாப்பிலான் நாவலின் சரியான திரை வடிவமாக நான் நினைப்பது ஷாஷான்க் ரெடெம்ப்ஷன் (Shawshank redemption) படத்தைதான். ஏனென்றால் நாவல் வாசகனின் கற்பனையில் நடைபெறும் நிகழ்வு. சினிமாவோ கண்ணெதிரே நடக்கும் கூத்து.அது படைப்பின் மீதான பார்வையாளனின் பங்களிப்பை வெகுவாகக் குறைக்கிறது. இந்த இடைவெளி நாவலைப் படித்த வாசகனைத் திருப்திப்படுத்தத் தவறுகிறது. மற்றொன்று நாவலின் பன்முகத்தன்மை - அது சினிமாவில் சத்தியமே இல்லாத ஒன்று. நாவலின் ஒற்றைச் சரடை எடுத்துக்கொண்டு சினிமாவாக எடுப்பதுதான் இருக்கும் ஒரே வழி.

பாலாவின் பரதேசி இரு வேறு நாவல்களின் கதைமாந்தரையும் களத்தையும் இணைப்பதில் வெற்றிபெற்று இருக்கிறது. அது ஒரு அசுர சாதனை. எப்படி என்றால் இடலாக்குடி ராசா - ரெட் டீ -குள் வாழ்ந்தால் என்ன நடக்கும்? என்ற கேள்வியும், இடலாக்குடி ராசாவின் ஆளுமையைப்  பன்முகப்படுத்தி ரெட் டீ யின் கதைமாந்தர்கள் ஒருமைப்படுத்தப்பட்டால் நமக்குக் கிடைப்பது "பரதேசி".

உண்மையில் ஒரு படைப்பின் மீது தன் பார்வை என்ன என்பதே ஒரு படைப்பை மறு உருவாக்க சரியான வழி. இதற்கு இரண்டு உதாரணங்களை சொல்லலாம்.


ஒன்று -பசொலினியின் The Gospel According to St. Matthew 
இரண்டு - லூயி புனுவலின் Robinson Crusoe (1954)


அப்படிச் சொல்லவேண்டிய ஒரு படம் பரதேசி.

தொடரும்....

Monday, January 28, 2013

சொல்வனத்தில் வந்த என் கவிதை

எப்போதும் போல்

நாளை நான்
இன்னொருவனின் கல்லறையில்
ஒளிந்திருக்கலாம்.
ஒரு குழந்தையின் கைப்பிடி மண்,
யாரோ ஒருவரின் கண்ணீர்,
அல்லது
காறித்துப்பும் எச்சில்
என் மேல் விழலாம்.
யாவையும் அல்லாது
யாருடைய கல்லறையில்
ஒளிந்திருக்கிறேன்
என்பதைத்
தோண்டி அறியும் நாயாக
நானே இருக்கலாம்.
இருந்தும்,
இறுதியாய்க் கல்லெறிவது
எனக்கு
எப்போதும் போல்
சுலபமாய் இருக்கிறது.


நன்றி: சொல்வனம் 
http://solvanam.com/?p=23939

Wednesday, January 9, 2013

கால்சட்டை மனம்


கால்சட்டைப் பையில் 
மறைக்கப்படும் 
ஒவ்வொரு கையையும் போல, 

ஒரு மரணம் 
நட்பு 
பிரிவு 
துரோகம் 
அல்லது ஒரு பட்டியல்
மறைக்கப்படலாம்

பைகளும் கைகளும்
நிறையும் போது
கொஞ்சம் மனமும்.