Thursday, August 26, 2010

புத்தகம்: ஹெய்டி - ஜோஹானா ஸ்பைரி

கடந்த வாரம் landmark -ல் சில புத்தகங்களை கேட்க அவர்கள் நான் கேட்ட எந்தப் புத்தகமும் இல்லை என்று சொன்னார்கள். :(
அப்போது எஸ்.ராமகிருஷ்ணனின் பரிந்துரையான ஹெய்டி-யைப் பார்த்தேன். பலமுறை இந்த புத்தகத்தை புத்தகக் கடைகளில் பார்த்துவிட்டு வைத்து விடுவேன். எஸ்.ராமகிருஷ்ணனின் எந்தப் பரிந்துரை புத்தகமும் இதுவரை என்னைக் கைவிட்டதில்லை. இதுவும் அப்படியே.

இந்தப் புத்தகத்தைப் பற்றிப் படிக்கும் முன் எஸ்.ராவின் அனுபவத்தைப்படித்துவிடுங்கள்.

இப்போது உங்களிடம் ஒரு கேள்வி...... உலகிலேயே அதிகபட்சக் கொடுமைக்கு உட்படுத்தப்படுவது யார்?
உங்களின் பதில் கீழ்க்கண்ட எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

ஈழத்தமிழர்கள்...... பாலஸ்தீனியர்கள்..... தொழிலாளர்கள்.... தலித்துகள்...... சிறுபான்மை மக்கள்.... மனநோயாளிகள்..... விவசாயிகள்....

ஆனால் இவர்கள் யாருமே கிடையாது.... அதற்கான பதில் குழந்தைகள். குழந்தைகளின் மேலான வன்முறை கட்டற்றது. இந்தியாவில் இளையோர் எண்ணிக்கை முதியோர் எண்ணிக்கையைவிட அதிகம் என்பதை நாம் இங்கே நினைவில் கொள்ள வேண்டும். ஒரு பெரும்பான்மையான கூட்டம் சிறுபான்மையால் தண்டிக்கப்படுவது குழந்தைகள் விஷயத்தில்தான். ஏனெனில் அவர்கள் பலகீனமானவர்கள். திருப்பித் தாக்க உடல்/மன வலிமை இல்லாதவர்கள். எனது நண்பர் ஒருவர் தன் பையனுக்கு ஓவியம், பாட்டு, கணக்கு, நடனம் இவற்றில் எல்லாம் பயிற்சி கொடுப்பதாக சொன்னார். பையனின் வயது என்ன? என்றேன். மூன்று என்றார். எதற்கு இவ்வளவு கொடுமை செய்கிறீர்கள் என்ற போது, இப்பொழுதே இப்படி பயிற்சி கொடுத்தால்தான் அவன் IIT -ல் சேர முடியும் என்றார். எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. நீங்கள் பார்க்கும் எந்த அறிவாளியும் இப்படி உருவாக்கப்பட்டவர்கள் அல்ல. திறமையைக் கண்டுபிடித்து வளர்ப்பது தவறல்ல. திறமையை உண்டாக்க நினைப்பது முட்டாள்தனம் என்றெல்லாம் பேசிய பிறகு அவர் சொன்னது : இப்படி எல்லாம் நினைத்ததால்தான் நீங்க இப்படி ஒரு சாதாரண சாப்ட்வேர் இஞ்சினியரா இருக்கீங்க. என்புள்ள நாசாவுல வேலை செய்வான் அப்பிடின்னார். எனக்கு அந்தக் குழந்தையை நினைக்கப் பரிதாபமாக இருந்தது. இந்த சூழ்நிலையில் 1880 ல் எழுதப்பட்ட ஹெய்டி மிக முக்கியத்துவம் பெறுகிறது.


ஹெய்டி ஒரு ஐந்து வயது குழந்தையாக அறிமுகம் ஆகிறாள். அவளுக்கு அம்மா அப்பா இல்லை. தாத்தாவிடம் வளர வேண்டிய சூழல். தாத்தாவோ ஊரே வெறுக்கும் மனிதர் அல்லது ஊரை வெறுக்கும் மனிதர். அங்கே அவள் எப்படி வாழ்கிறாள். தாத்தாவிடமிருந்தும் இயற்கையிடமிருந்தும் எப்படி கற்றுக் கொள்கிறாள் என்பதுதான் கதை.
கதையில் மிகக் குறைவான கதாப்பாத்திரங்களே வருகின்றன. ஹெய்டி, அவளின் தாத்தா, பீட்டர் (ஆடு மேய்க்கும் சிறுவன்) மற்றும் அவன் குடும்பம், நடக்கவே முடியாத கிளாரா, டாக்டர், கண்டிப்பான உதவியாளர் மேயர், கிளாராவின் பாட்டி & அப்பா.இவை தவிர சில கதாப்பாத்திரங்கள் உண்டு. பூக்களும், மலையும், ஆடுகளும் சிறுவர் உலகின் சிறந்த குறியீடுகள். அவர்கள் அவற்றுடன் பேசுகிறார்கள், விளையாடுகிறார்கள்.
உடல் நலமில்லாத பணக்காரக் குழந்தையான கிளாராவிற்கு தோழியாக பிராங்க்பர்ட் கொண்டு செல்லப்படும் ஹெய்டி, அங்கு கிளாராவுடன் ஏற்படும் நட்பு. அங்கே அவளின் அணுகுமுறையால் குடும்பத்தில் ஒருத்தியானாலும் அவளின் மனநிலை பாதிக்கப்பட்டு மறுபடி தாத்தாவிடமே அனுப்பப்படுகிறாள். அங்கே அவளின் வாழ்க்கை எப்படி சுவாரசியமாகிறது, பிறகு வரும் கிளாராவின் உடல்நிலை எப்படி மாறுகிறது, பீட்டரின் மனநிலை என்ன என்பதுதான் கதை. குழந்தைகள் எல்லாமே உங்களால் முடியும் என்று நினைக்கிறார்கள், ஆனால் நாம் அவர்களுக்கு எதெல்லாம் முடியாது என்று சொல்லிக் கொடுக்கவே முயல்கிறோம். இதில் பீட்டரின் பாட்டிக்கு கண் பார்வையை தன் தாத்தாவால் திரும்பத்தர முடியுமென்று ஹெய்டி நம்புகிறாள். முடியாதெனும்போது பார்வையின்மை இயல்பானது என ஏற்றுக் கொண்டு அவள் பாட்டிக்குத் தேவையான ரொட்டியைத் தருகிறாள். அதேபோல நடக்கவே முடியாத கிளாரா நடக்க முடியும் என்று ஹெய்டி, பீட்டர், கிளாரா மூவருமே நம்பி வெற்றி பெறுகிறார்கள்.

எது அவர்களால் முடியும் என்று அவர்களே (குழந்தைகளே) தீர்மானிக்கட்டும்....தீர்மானிக்க வேண்டியது நாமல்ல. அதேபோல் குழந்தைகள் நீங்கள் அவர்களுக்குத் தரும் வசதிகளைவிட அன்பையும், இயல்பான கற்றலையுமே விரும்புகிறார்கள் ஹெய்டியை போல. இது குழந்தைகளுக்கான நாவல் மட்டுமல்ல, எல்லா வயதினருக்குமான நாவல். நீங்கள் இந்தப் புத்தகத்தைப் படிக்கும் போது கண்டிப்பான மேயரை உங்களுக்குப் பிடிக்காது, ஆனால் இந்தப் புத்தகத்தை உங்கள் குழந்தை படித்தால் உங்களையே மேயராக நினைக்கலாம். எனவே நீங்களே மேயரைப் போல வாழ்வதை உணர்ந்து உங்கள் குழந்தையின் மீதான வன்முறையை கைவிட்டால் அது ஹெய்டிக்குக் கிடைத்த வெற்றி.

புத்தகத் தமிழாக்கம் நன்றாக இருக்கிறது என்றாலும் சில குறைகள் உள்ளன. விலங்குகளை மேற்கத்தியர்கள் அவன் அவள் என்று அழைப்பார்கள் ஆனால் நாம் விலங்குகளை அது/அவை என்றே அழைப்போம். இங்கும் அப்படியே மொழிபெயர்த்திருக்கலாம். ஆடுகள் கூட அவள் என்றே அழைக்கப்படுவது அந்நியப்படுத்துகிறது.

புத்தகத்தின் பெயர் : ஹெய்டி
எழுதியவர் : ஜோஹானா ஸ்பைரி
மொழிபெயர்த்தவர் : ஸ்ரீமதி, கயல்விழி
பதிப்பகம் : சந்தியா பதிப்பகம்
ஃப்ளாட் ஏ, நியூடெக் வைபவ்.
57-53ஆவது தெரு,அசோக் நகர்.
சென்னை - 600083

விலை : 160 ருபாய்

Wednesday, August 25, 2010

மனநல மருத்துவர் - மச்சடோ டி ஆசிஸ்

நீங்கள் எப்போதாவது ஒரு மனநிலை பிறழ்ந்தவராக உணர்ந்ததுண்டா?
அல்லது
பிறரை அப்படி உணர்ந்ததுண்டா?
அல்லது
சமூகம் அப்படி இருப்பதாக உணர்ந்ததுண்டா?

ஆம் எனில் இந்தப் புத்தகம் உங்களுக்கானது.

மச்சடோ டி ஆசிஸ் எழுதிய மனநல மருத்துவர் என்ற கதையைப் படிக்கும் பொது நாம் ஒரு பழக்கப் பட்ட உலகில் வாழ்வதையே உணர்வோம்.

சீமோன் ஒரு மருத்துவர். அவருக்கு உளவியல் மருத்துவத்தில் நாட்டம் ஏற்பட்டு அதைக் கற்கிறார். பின் ஊரில் இருக்கும் பைத்தியங்களைப் பராமரிக்க நகரசபை உதவியுடன் ஒரு மனநல விடுதியை(கிரீன் ஹவுஸ்) ஆரம்பிக்கிறார். தொடர்ந்த ஆராய்ச்சிகளின் விளைவாக யார் பைத்தியம் என்பதைத் தீர்மானிக்க ஒரு விதியைக் கண்டுபிடிக்கிறார்.

விதி ஒன்று : அது யார் எப்படி இருந்தாலும் அவர்களுக்குள் ஒரு மனநலக் குறைபாடு இருக்க வாய்ப்பிருக்கிறது. மனைவியிடம் கோபப் படுவது, பிறரைப் புகழ்வது என எல்லாமே மனநோய்க்குறிகள் என்று ஊரில் உள்ள முக்கால்வாசிப் பேர் கிரீன் ஹௌசிற்கு கொண்டு வரப் படுகின்றனர். அவருக்கு எதிராகப் புரட்சி வெடித்துக் கிளம்புகிறது. "வதங்கிய கோட்டைகள்" என்று அழைக்கப் படும் அவர்கள் நகர சபையைக் கைப்பற்றினாலும் அவர்களுக்கு ஒரு பைத்தியக்கார விடுதி தேவையாய் இருக்கிறது. புரட்சிக்கு எதிரான புரட்சி வெடித்து புது ஆட்சி வர, அந்த நேரம் பார்த்து டாக்டரின் கொள்கையும் மாறிவிடுகிறது.

விதி இரண்டு: யாரெல்லாம் நேர்மை, வாய்மை, பகுத்தறிவுடன் உள்ளார்களோ அவர்கள் எல்லாம் மனநோயாளிகள்.
இதன் படி சிலரே விடுதியில் அடைக்கப்படுகின்றனர்.120 வருடங்களுக்கு முன்னும் கூட சிலரே இந்தக் குணாதிசயங்களுடன் இருந்துள்ளனர் :) அதையெல்லாம் அவர்கள் கைவிடும்வரை சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த இடத்தில் ஒவ்வொருவரும் எப்படி தங்கள் கொள்கைகளைக் கைவிடுகின்றனர் என்பதை மச்சடோ மிகச்சிறப்பாக சொல்லியிருப்பார்.

இறுதியில் டாக்டர் மறுபடியும் தன தேடல் வழியே புது விதியைக் கண்டடைகிறார். அது என்ன என்பதையும் அதன் விளைவு என்ன என்பதையும் புத்தகத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளவும்.

பகடியில் பலவிதம், இதில் வரிக்கு வரி பகடிதான். கதையில் உலாவும் எல்லோரும் நம்மை எதோ ஒரு இடத்திலாவது பிரதிபலிப்பது மச்சடோவின் சாதனை. ஆராய்ச்சி என்ற பெயரில் நடக்கும் கோமாளித்தனங்களை நூறு வருடங்களுக்கு முன் இப்படி ஒரு மனிதன் பகடி செய்திருப்பதை நம்பவே முடியவில்லை. இத்தாகூய் நகரத்தை நாம் வாழும் சமூகமாகவும், நகரசபை நம்மை நிர்வாகம் செய்யும் அரசியல் அமைப்புகளாகவும் கொண்டால், நாம் எல்லா சமயங்களிலும் நோயாளியாகவும், டாக்டராகவும் வாழ்வது புரியும். ஒவ்வொரு முறை பிறரை நோயாளிகளாக உணரும் பொது நாம் விடுதலை பெற்றதாய் உணர்கிறோம். அதே நேரம் நாம் நோயாளியாவது தவிர்க்க முடியாததாகிறது. பெரும்பாலும் உண்மையை உணரும்போது மரணம் நமக்கு மிக நெருக்கமாக இருப்பதை உணரலாம். சமூகம், மக்கள், புரட்சி, மருத்துவம், ஆராய்ச்சி, தத்துவம், பக்திஇவற்றைப் பகடி செய்து இந்த உண்மையைச் சொல்வதில் மச்சடோ பெரும் வெற்றி பெற்றுவிட்டார்.

வரிக்கு வரி மொழிபெயர்ப்பு செய்திருப்பதால் சில இடங்களில் வாசிக்கக் கடுமையாய் இருக்கிறது என்றாலும், கண்டிப்பாக எல்லோரும் வாசிக்க வேண்டிய புத்தகம்.

புத்தகத்தின் பெயர் : மனநல மருத்துவர்
எழுதியவர் : மச்சடோ டி ஆசிஸ்
மொழிபெயர்த்தவர் : ராஜகோபால்
பதிப்பகம் : சந்தியா பதிப்பகம்
ஃப்ளாட் ஏ, நியூடெக் வைபவ்.
57-53ஆவது தெரு,அசோக் நகர்.
சென்னை - 600083

விலை : 70 ருபாய்